Skip to main content

சயனைடு கலந்த குளிர்பானம் கொடுத்து இளம்பெண் கொலை; பூசாரியின் திடுக்கிடும் வாக்குமூலம்!

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Arrested priest gives sensational confession connection with  young girl case

 

சேலம் அருகே, சயனைடு கலந்த குளிர்பானம் கொடுத்து இளம்பெண்ணைக் கொன்றது ஏன் என கைதான கோயில் பூசாரி திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். 

 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டியைச் சேர்ந்தவர் பசவராஜ் (38). கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (28). பசவராஜ், கடந்த சில மாதங்களாகப் பெங்களூருவில் தங்கியிருந்து கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். வழக்கமாக மாலையில் தனது மனைவியுடன் பசவராஜ் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசுவார். 

 

இந்நிலையில், நவ. 15 ஆம் தேதி அவர் எப்போதும்போல் செல்வியின் அலைப்பேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார். அவர் எடுக்கவில்லை. அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அன்றைய தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற செல்வி, அதன்பின் வீடு திரும்பவில்லை என்பது தெரிய வந்ததை அடுத்து பசவராஜ், மனைவியைக் காணவில்லை என தாரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வியைத் தேடி வந்தனர். நவ. 17 ஆம் தேதி மாலை, சேலம் திருமலைகிரி அருகே பெருமாம்பட்டியில், பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகில் உள்ள முட்புதரில் செல்வியின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.     

 

சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில்,  பெரியாண்டிச்சி அம்மன் கோயில் பூசாரி குமார்(42) என்பவர்தான், செல்வியைக் கொலை செய்து, சடலத்தை முட்புதருக்குள் வீசியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பசவராஜுக்கும் செல்விக்கும் பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்து  இறந்துவிட்டன. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான செல்வி, அதிலிருந்து விடுபட, இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் விதவிதமான  ஆடைகளை அணிந்து கொண்டு, சினிமா பாடல்களுக்கு நடனமாடி காணொளி பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். இன்ஸ்டாவில் இவரை  2000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.     

 

இது ஒருபுறம் இருக்க, தனக்கு அடுத்த குழந்தையாவது நல்லமுறையில் பிறக்க வேண்டும் என்று கோயில் கோயிலாகச் சென்று வேண்டிக் கொண்டு இருந்துள்ளார். இந்தநிலையில்தான், பெருமாம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் வேண்டினால் குழந்தை பாக்கியம்  கிடைக்கும் என்று சிலர் சொல்லியுள்ளனர். அதை நம்பிய செல்வி, கடந்த நான்கு ஆண்டுகளாக பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு சென்று வந்துள்ளார். அந்தக் கோயில் பூசாரி குமார்,  அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கும் என அருள்வாக்கு சொல்லி இருக்கிறார். மேலும் அவர், வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்றும் பரிகாரம் கூறியுள்ளார். இதனால் அடிக்கடி அந்தக் கோயிலுக்கு செல்வி சென்று வந்ததில், அவருக்கும் பூசாரி குமாருக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

 

இந்த  பழக்கத்தின் அடிப்படையில் பூசாரியிடம் அவர் 30 ஆயிரம் ரூபாய் கைமாத்து வாங்கியிருந்தார். மேலும், செல்வி கோயிலுக்கு வந்து செல்லும்போதெல்லாம் இருவரும் தனிமையில் நெருக்கமாகவும் இருந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் பெண் பக்தர்களில் இருபதுக்கும் மேற்பட்டோரிடம் பூசாரி குமாருக்கு பாலியல் ரீதியான உறவு இருந்ததாகவும் காவல்துறை தரப்பு சொல்கிறது. இந்நிலையில் நவ. 15 ஆம் தேதி அந்தக் கோயிலுக்கு வந்த செல்வியை, தனது வீட்டிற்கு வருமாறு பூசாரி குமார் அழைத்துள்ளார். அதற்கு அவர்  மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த குமார், தான் கொடுத்த பணத்தை உடனே திருப்பிக் கொடு அல்லது நான் கூப்பிட்ட இடத்துக்கு வா என்று நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.    

 

இதையடுத்து செல்வி அணிந்திருந்த நகைகளைப் பறித்துக்கொள்ள திட்டமிட்ட குமார், குளிர்பானத்தில் சயனைடு விஷம் கலந்து கொடுத்து செல்விக்குக் கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே செல்வி உயிரிழந்துவிட்டார். அதன்பிறகு செல்வி அணிந்திருந்த 6 பவுன் தாலிக்கொடி, சங்கிலிகளை எடுத்துக் கொண்ட குமார், சடலத்தை அருகில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு தலைமறைவாகி விட்டார். அந்த நகைகளை சேலத்தில் உள்ள ஒரு அடகு கடையில் வைத்து 1.38 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். அந்தப் பணத்துடன், தனக்கு நெருக்கமான இன்னொரு தோழியை ஏற்காடுக்கு அழைத்துச் சென்று விடுதியில் அறை எடுத்து தங்கியதாக குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். குமாரின் அலைப்பேசி சிம் கார்டு சமிக்ஞைகளை வைத்து குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குமாரை, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்