Skip to main content

மீனவர்கள் கைது விவகாரம்; குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பெண்கள்!

Published on 07/12/2024 | Edited on 07/12/2024
Arrest of fishermen issue Women who came to struggle with children

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் தான் நேற்று முன்தினம் (05.12.2024) ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 2 படகுகளில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர். மேலும் வருகின்ற 19ஆம் தேதி வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக் கோரி தங்கச்சி மடத்தில் இன்று (07.12.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதாவது மீன்பிடித் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலர் தங்களது கை குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து மீனவர்கள் நடத்தி வந்த போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொண்டனர். 

சார்ந்த செய்திகள்