Skip to main content

மிரட்டும் சிமெண்ட் ஆலை நிர்வாகம்; போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

ariyalur cement factory versus farmers issues 

 

அரியலூர் மாவட்டத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. அதில் ஆலத்தியூர் கிராமத்தில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலை ஒன்றுக்கு புதுப்பாளையம் கிராமத்தில்  சுண்ணாம்புக்கல் தோண்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட சொந்தமான நிலம் உள்ளது. இந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படாத பல விவசாயிகளுடைய விளைநிலங்களும் குடியிருப்புப் பகுதிகளும் மிக அருகில் உள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் சுண்ணாம்புக்கல் சுரங்கம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

அதேபோல், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான வெங்கடாசலபதி, அவரது மனைவி தமிழரசி, திருவேங்கடம், அவரது மனைவி சந்திரகலா, சீனிவாசன், அவரது மனைவி சூரியகலா, பூலோகம் ஆகியோர் புதிய சுரங்கம் வெட்டுவதால் தங்களது விவசாய நிலத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் வற்றி போர்வெல்லில் தண்ணீர் வருவதில்லை. விவசாய நிலங்களில் புழுதிகள் படிந்து பயிர்கள் சேதம் அடைகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து சிமெண்ட் ஆலை நிர்வாகத்தின் புகாரின் பேரில் அங்கு வந்த தளவாய் காவல்நிலைய போலீசார் மேற்படி விவசாயிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் கொண்டு வந்து அடைத்தனர். அதன் பின்னர் கைது செய்ததற்கான காவல் பதிவேட்டில் விவசாயிகள் கையெழுத்து போடாமலும் உணவு சாப்பிட மறுத்தும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விவசாயிகள் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் எங்களது நிலங்களை விற்று விட்டு வெளியேறச் சொல்லி சிமெண்ட் ஆலை நிர்வாகம் மிரட்டுவதும் போலீசாரை வைத்து பொய் வழக்குப் பதிவு செய்தும் நடைபெற்று வருகிறது. நாங்கள் வாழ்வதா அல்லது குடும்பத்தினரோடு தற்கொலை செய்து கொள்வதா என்ற நிலையில் உள்ளோம்" என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

தங்களது வாழ்வாதாரப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது அரியலூர் மாவட்ட விவசாயிகளிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகளால் விபத்துகள், உயிரிழப்புகள், அரசு விதிமுறைகளை மீறி சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டுவதால் பல்வேறு பாதிப்புகள் என விவசாயிகளும் பொதுமக்களும் தினசரி போராட்ட வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார். 

Next Story

போராட்டத்திற்கு தேதி குறித்த விவசாயிகள்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
 Farmers on the date for the struggle 

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட 12 அம்ச வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்றபோது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து தடுக்கப்பட்டனர்.

இந்த தடுப்புக்கட்டைகளைத் தகர்த்தெரிந்த விவசாயிகள் தடைகளை மீறி டெல்லி நோக்கி புறப்பட்டபோது விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். மேலும் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு பட்டுத் தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயி ஒருவரும் போராட்டக் களத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. அதே சமயம் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாயிகள் விரிவான ஆலோசனை செய்து வந்தனர்.

இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், “டெல்லிக்கு பேரணியாக செல்லும் எங்கள் (விவசாயிகள்) திட்டம் அப்படியே உள்ளது. அதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. எல்லையில் பலத்தை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 6 ஆம் தேதி விவசாயிகள் நாடு முழுவதிலும் இருந்து ரயில், பேருந்து, விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு போராட்டத்தில் கலந்துகொள்ள அரசு அனுமதிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம். அன்றைய தினம் நன்பகல் 12 மணி முதல் மாலை முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.