
கணவனின் மதுப் பழக்கத்தால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று மாத கைக்குழந்தை நிற்கதியாக இருப்பது மேலும் வேதனையை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சோற்றுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ்-அஷ்டலட்சுமி தம்பதியினர். இவர்கள் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. சுபாஷுக்கு அதீத குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றும் இது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அஷ்டலட்சுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகிலிருந்த பருத்திக் கொல்லையில் சுபாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் மற்றும் தந்தை உயிரிழந்த நிலையில் மூன்று மாத கைக்குழந்தை பரிதவிக்கும் நிலை சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.