Skip to main content

எதிர்த்து போராடுபவர்கள் அறிவற்றவர்களா? ஒரு விவரமும் அறியாதவர்களா? - சீமான் காட்டம்! 

Published on 19/12/2020 | Edited on 20/12/2020

 

seeman

 

வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி இந்தப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி செய்துகொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள் அவசரச் சட்டம், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான வணிக விரிவாக்கம் என்கின்ற ஒரு அவசரச் சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மீதான பாதுகாப்பு ஒப்பந்தம், ஒப்பந்த விவசாயம் என்ற சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. உழைக்கும் மக்களைக் கூட்டிணைவு நிறுவனங்கள், அதாவது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமைகளாக, கூலிகளாக மாற்றுகின்ற வேலையை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கல்விக் கொள்கை, ஒரே தேர்வு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வழி என்று கொண்டுவந்த இந்த ஆட்சியாளர்கள் ஒரே சந்தை என்று கொண்டு வருவதற்குத்தான், இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

 

இங்கு உற்பத்தி செய்கிற, விளையவைக்கிற பொருளை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கொண்டுசென்று விற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எங்கள் விவசாயிகள் விளைவிக்கும் தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை எடுத்துக்கொண்டு சென்று மகாராஷ்டிரா, பீகாரில் விற்க முடியுமா? யாரைத் தொடர்பு கொள்வது, இதற்கான போக்குவரத்தை எல்லாம் யார் கொடுப்பது. அத்தியாவசியப் பொருளில் உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், பருப்பு, எண்ணெய், போன்றவை அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என்று இந்தச் சட்டம் சொல்கிறது. இவையெல்லாம் அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என இந்தச் சட்டம் சொல்லிவிட்டால் இந்தப் பொருட்களெல்லாம் அத்தியாவசியப் பொருளாக இல்லாமல் ஆகிவிடுமா?

 

அத்தியாவசியப் பொருளாக இவையெல்லாம் இருக்கும்பொழுதே ஒரு செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள். வெங்காயம், பருப்பு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெங்காய விலை, பருப்பு விலை அதிகரித்துப் போகிறது. இப்படி இருக்கும் நிலையில் அத்தியாவசியப் பொருளாக இது இல்லை என்றால், தக்காளி அதிகமாக மகசூல் ஆகும் நேரத்தில் தக்காளியை அதிகப்படியாகக் கூட்டிணைவு நிறுவனங்கள் வாங்கி, சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்துக்கொண்டு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி பெரிய அளவில் லாபம் வைத்து விற்பார்கள்.

 

ஒரு கிலோ தக்காளி 500 ரூபாய், 1,000 ரூபாய் என்று சொன்னாலும் வியப்பதற்கு இல்லை. இந்த நிலையை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. ஆனால், இதைச் சரியான சட்டம் என்று சொல்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட இப்படிச் சொல்கிறார். மத்தியில் ஆள்கின்ற தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அல்லது வேளாண்துறை சார்ந்த அமைச்சர்கள் அல்லது மூத்த தலைவர்கள் யாராவது ஒருவர் இந்தச் சட்டத்தில் இருக்கக்கூடிய அம்சங்கள் வேளாண் குடிமக்களுக்கு நன்மைகள் இருக்கிறது என்று விளக்கமுடியுமா? ஒருமுறை பேசுங்கள் பார்ப்போம்.

 

cnc

 

எதிர்த்துப் போராடுபவர்கள் அறிவற்றவர்களா? ஒரு விபரமும் அறியாதவர்களா? வேலையை விட்டுவிட்டு இவ்வளவு தூரம் சென்று போராடிக் கொண்டிருப்பவர்கள் பைத்தியக்காரர்களா? இந்தச் சட்டத்தால் வேளாண்குடி மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்தால் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பு ஏற்காது என்று சொல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது. சரியான சட்டம் தானே... நல்ல சட்டம் தானே... நீங்கள் சொல்லும்படி பார்த்தால், பிறகு ஏன் அதற்குப் பொறுப்பேற்க முடியாது என்று தப்பிக்க வேண்டும். அதேபோல் இது தொடர்பாக  நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுக்க முடியாது என்று கூறுவது ஏன்?  பேராபத்தில்  கொண்டுபோய்ச் சேர்த்துவிடும் இது.

 

தமிழகம் எல்லாச் சட்டங்களையும் எதிர்க்கிறது என்று கூறுகிறார்கள். கூட்டணி வைத்து விட்டோம் என்பதற்காக எல்லாவற்றுக்கும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக் கொண்டிருக்கக் கூடாது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.