திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததுள்ளது. அந்த கலப்பட நெய் விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்திற்குத் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல்லில் இருக்கும் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி விநியோகம் செய்த ஏ.ஆர்டெய்ரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளி கிருஷ்ணா புகார் கொடுத்து இருக்கிறார்.
அந்தப் புகாரில், “திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 10 லட்சம் கிலோ தரமான நெய் விநியோகம் செய்ய தேவஸ்தானம் சார்பில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி டெண்டர் விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மே 8 ஆம் தேதி ஒரு கிலோ நெய்யின் விலை ரூ.319 ரூபாய் 80 காசு என ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் டெண்டரை திருப்பதி தேவஸ்தானம் இறுதி செய்தது. இதன் மூலம், ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்கு மே 15 ஆம் தேதி நெய் வழங்கும் டெண்டருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 12, 20, 25 ஆகிய தேதிகளிலும், ஜூலை 6, 12 ஆகிய தேதிகளிலும் 4 டேங்கர் நெய்யை அந்நிறுவனம் அனுப்பி வைத்தது. இதில் முந்தைய ஜெகன்மோகன் அரசு, ஜூன் மாதம் அனுப்பிய நெய்யை பரிசோதிக்காமல் உபயோகித்தது. இதனால் பக்தர்களிடம் இருந்துபல புகார்கள் வந்தன.
திருப்பதி தேவஸ்தானம் புறனான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அந்த டெய்ரி நிறுவனம் மீறியது லட்டு பிரசாதம் தயாரிக்க அந்த நிறுவனம் கலப்பட எண்ணெய் வழங்கியதாக வெளியான செய்தியால், பக்தர்கள் கவலை அடைந்தனர். ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் நல்ல தரமான நெய்யை வழங்கும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் நெய் தரமற்றதாக இருந்ததால் அது கோடிக்கணக்கான பக்தர்களின் ஆரோக்கியத்தையும், மத உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் பாதித்துவிட்டது. தேசிய பால் பொருட்கள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் பன்றி இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதிக கலப்படமும் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜூலை 22, 23, 27 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு ஆகஸ்ட் 4-ம் தேதி ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் சார்பில், திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில் எங்கள் நிறுவனம் எவ்வித கலப்படமும் செய்யவில்லை என விளக்கமளித்தது.
இருப்பினும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது உறுதியானதால், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது, உணவுப் பொருளில் கலப்படம், மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையறிந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த நிறுவனத்தைத் திருப்பதி தேவஸ்தானம் ப்ளாக் லிஸ்டில் வைத்துள்ளது. அதனால், எங்கள் நெய் தரமானது என்று உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் வழக்கும் தொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்துள்ள வழக்கில் ராஜசேகர் முன் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் உரிமையாளர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.