Anti-corruption probe for second day at KCP

நேற்று (10/08/2021) காலைமுதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள்மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நிறைவடைந்தது.

Advertisment

அதிமுகமுன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் இருந்து ரூபாய் 13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள், தொழில் நிறுவனங்களின் பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூபாய் 2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஹார்டு டிஸ்குகள், முறைகேடு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகலஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை பீளமேட்டில் உள்ள கேசிபிநிறுவனத்தில் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவில் முடிந்த நிலையில், இரண்டாவது நாளாக தற்போது மீண்டும் சோதனை துவங்கியுள்ளது. மேலும் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்த சோதனை தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வெளியானதா என்பது குறித்தும்விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment