Skip to main content

ஈரோடு பொதுப்பணித்துறை அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் ரெய்டு...

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

Anti-Corruption Department raids Erode Public Works Department official's office ...!

 

 

தொழிற்சாலைகளில் நிறுவப்படும் பாய்லர் எனப்படும் கொதிகலன்களுக்கு பொதுப்பணித்துறை கொதிகலன் பிரிவில் அனுமதி பெறப்பட வேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை கொதிகலன் உறுதித்தன்மை குறித்து அந்தப் பிரிவு சான்று வழங்க வேண்டும். 

 

அவ்வாறு அனுமதி வழங்குவதற்கும் புதுப்பிக்கவும், பொதுப்பணித்துறையினர் பல ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளது. இந்த நிலையில் சென்ற 13ஆம் தேதி ஈரோடு பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் நான்கு  அரிசி ஆலைகளில் கள ஆய்வு செய்துள்ளனர். 

 

அப்போது அவர்கள் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து டி.எஸ்.பி திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரேகா மற்றும் போலீசார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  மூன்றாம் தளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள்.  அந்த சோதனையில் ரூபாய் 1.61 லட்சம் பறிமுதல் செய்தார்கள். இதையடுத்து பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் அவருக்கு புரோக்கராக செயல்பட்டு வந்த பவானி எலவமலை கிராமத்தை சேர்ந்த ராம்குமார் ஆகிய இருவர் மீதும்  லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

 

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஈரோடு சங்கு நகரில் உள்ள உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் வீட்டில் 15ஆம் தேதி இரவு டி.எஸ்.பி திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரொக்கமாக ரூபாய் 66 ஆயிரமும் மேலும் ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

முதல்கட்டமாக மதிப்பீடு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு மட்டும் ரூபாய் 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும்  கைப்பற்றப்பட்டுள்ள மற்ற சொத்து ஆவணங்களின் மதிப்பு குறித்து போலீசார் தொடர்ந்து மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 

உதவி இயக்குனர் மகேஷ் பாண்டியன் சொந்த மாவட்டம் தேனி என்பதால் அங்கு உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை முடிவில்தான் எவ்வளவு ரூபாய், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.