ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சியின் ஆணையாளராக இருக்கக் கூடியவர் சிவக்குமார். இவர் அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் பணியாற்றினார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இவர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாநகராட்சி துறையில் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு பல்லாவரம் நகராட்சி அலுவலராகப் பணியாற்றினார். அந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது புகார் இருந்தது. இந்த நிலையில் தற்போது ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் நிலையில் இன்று ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், ஈரோடு பெரியார் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.