அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்பொழுது வரை அந்த சம்பவத்திற்கு விடை கிடைக்காமல் நீண்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் விசாரணைகள் மட்டும் நடந்து வருகிறது. இந்தநிலையில், தர்மபுரியில் அரசுப் பள்ளி ஒன்றின் குடிநீர்த் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வந்த நிலையில், அதைப் பரிசோதனை செய்ததில் தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருப்பது தெரியவந்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைகுளம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 120 மாணவர்கள் அந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். பயிலும் மாணவர்களின் குடிநீர் வசதிக்காக பள்ளி வளாகத்திலேயே மினி குடிநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாணவர்கள் நீர் அருந்த முயன்றபோது துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆசிரியரிடம் மாணவர்கள் தெரிவித்த நிலையில், பள்ளி ஆசிரியர் கணேசன் தொட்டியை ஆய்வு செய்தார். அப்பொழுது அதில் மனிதக் கழிவு கிடந்தது தெரியவந்தது. உடனடியாக பாப்பாரப்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் மற்றும் வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் துளசிராமன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு தொட்டியைச் சுத்தம் செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நீரின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.