பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ - இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து அணி 2வது முறையாக வெற்றிபெற்றுள்ளது.
அசாம் மாநிலம் கவுஹாத்தில் தேசிய அளவில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ-இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கடந்த பிப்ரவரி 19 முதல் 29 வரை நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 8 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றனர். அந்த வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி, கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடியது.
இந்த கால்பந்து லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அதில், அரையிறுதி போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணியை, அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து. இறுதிப் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருநானக் தேவ்பல்கலைக்கழகம் அணியை (3-2) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கேலோ-இந்தியா போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற கால்பந்து அணி வீராங்கனைகள் இன்று (01-03-24) மதியம் ரயில் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு திரும்பினார்கள். அப்போது, சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த வீராங்கனைகளை, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் அனைவருக்கும் மாலை அணிவித்து மேளதாளங்களுடன் வாழ்த்தி வரவேற்றார்.
இந்நிகழ்வில் உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜசேகரன், பொறியியல் புல முதன்மையர் கார்த்திகேயன், கல்வியியல் புல முதன்மையர் குலசேகர பெருமாள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், துணைவேந்தரின் நேர்முகச் செயலர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஊழியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.