Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி பயில விண்ணப்ப விநியோகம் துவக்கம்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Annamalai University application distribution for distance learning courses has started

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கான தொலைதூரக் கல்வி பயில புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் கலந்துகொண்டு விண்ணப்பத்தை மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய குழு அளித்த ஒப்புதலின்படி 125 பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  தொலைதூரக் கல்வியில் 25,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 80 ஆயிரம் ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 16 வகையான பட்டப்படிப்புகளை தமிழ் வழியில் தமிழகம் மற்றும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் கூடுதலாக 35 வகையான பட்டப் படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும் தொலைதூரக் கல்வியை ஆன்லைன் வழியாக 2024 - 25 ஆம் ஆண்டிலிருந்து துவக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புகளை நடத்துவதற்கும், சட்டப் படிப்புகளை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பயில்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொலைதூரக் கல்வியில் சேர உள்ள மாணவர்கள், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக சர்வீஸ் சென்டரில் நேரிலும், அதேபோல் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம். வெளி மாநில மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டும் விண்ணப்பத்தை பெற முடியும் என தெரிவித்தார்.  இவருடன் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரகாஷ் மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

 தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
All over Tamil Nadu schools will have a holiday tomorrow

பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை ஏப்ரல் இறுதியில்  தொடங்கி ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் வந்ததால், முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இருந்தாலும், வெப்ப அலையின் காரணமாகவும் ஜூன் முதல் வாரத்தில் திறக்க வேண்டிய பள்ளி ஜூன் 10 ஆம் தேதிக்குத் தள்ளிப்போனது. 

இந்த நிலையில்தான் திறப்பு விடுமுறை அளிக்கப்பட்ட தொடர்ந்து அதனை ஈடுசெய்யும் வகையில், நடப்பு ஆண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் நாளை(13.7.2024) அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மாதத்தில் 2வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கவேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை ஏற்று, நாளை பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அளித்துள்ளது. 

Next Story

‘பாதம் பட்ட இடம் யாவும் பாதை என்றே மாற்றிட ஓடு..’- வரலாறு படைத்த பழங்குடியின மாணவிகள்!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
became the first tribal girl student to crack JEE and get into NIT
ரோகிணி - சுகன்யா

திருச்சி மாவட்டம், பச்சமலையை ஒட்டிய கிராமம் சின்ன இலுப்பூர். தேவையான மின் வசதி, கழிப்பிட வசதி, இணைய வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமம்தான், இந்த சின்ன இலுப்பூர். இங்கு வாழும் பழங்குடி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். கேரளாவில் கூலி வேலை செய்கிறார். இவரது மனைவி வசந்தி. பச்சைமலையில் விவசாயம் செய்து வருகிறார். இந்த தம்பதியின் மூன்றாவது மகள், ரோகிணி.

இந்த கிராமத்தில் பழங்குடியின மக்களின் குழந்தைகள் பயில்வதற்காக அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்2 முடித்த மாணவி ரோகிணி, சமீபத்தில் ஜேஇஇ போட்டி தேர்வில் கலந்து கொண்டார். தாயுடன் வீட்டில் இருப்பதால் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளையும் படிப்பு வேலைகளையும் அவரே பார்க்கவேண்டிய சூழல். இதனால் படிப்பில் சோர்ந்துபோகாத ரோகிணி, துடிப்புடன் படித்து வந்துள்ளார். இதைக் கவனித்த பள்ளி ஆசிரியர்கள், ரோகிணியை மேலும் படிக்குமாறு ஊக்குவித்துள்ளனர். தற்போது அதன் முடிவுகள் வெளியான நிலையில், ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இதனால் அவர் திருச்சி என்ஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்து பயில தேர்வாகி உள்ளார். இதன்மூலம், திருச்சி என்ஐடியில் படிக்கும் வாய்ப்பு பெற்ற முதல் பழங்குடியின மாணவி என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி ரோகிணி கூறும்போது, “மலைவாழ் மக்களுக்கான பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்து ஜே.இ.இ தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்று, திருச்சி என்.ஐ.டியில் சேர்க்கை பெற்றுள்ளேன். பி.இ., கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்து உள்ளேன். என் படிப்புக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. பள்ளியில் படித்த போது என்ஐடி கெமிக்கல் ஆய்வகத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, ஆசிரியர்களிடம் என்.ஐ.டியில் சேர்க்கை பெற வேண்டும் என்று கேட்டேன். பள்ளியில் பிளஸ் டூ தேர்விலும் ஜேஇஇ தேர்விலும் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி உதவி செய்தனர். என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மேல்படிப்புக்கு உதவி செய்யும் முதல்வர் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதே போன்று, சேலம் மாவட்டம் கரியகோவில் வளவைச் சேர்ந்த பூச்சான்-ராஜம்மாள் ஆகியோரின் மகள் சுகன்யா. பழங்குடியின மாணவியான சுகன்யாவும் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் திருச்சி என்.ஐ.டியில் புரொடக்ஷன் என்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜம்மாள் இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தையடுத்து, பெரியம்மா பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவர், தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட இலவச நுழைவுத் தேர்விற்கான பயிற்சியில் கலந்துகொண்டார். இதையடுத்து, சேலத்தில் ஜேஇஇ நுழைவுத்தேர்வை எழுதி, மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற சுகன்யாவிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வென்று திருச்சி என்.ஐ.டி யில் பயில போகும் அன்புத்தங்கை சுகன்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். "கல்வி ஆகச்சிறந்த செல்வம்" அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை, தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், திருச்சி கைலாசபுரத்தைச் சேர்ந்த கவினி என்ற மாணவி, ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வென்று கட்டிடக்கலை பிரிவை தேர்வு செய்துள்ளார். முத்தரசநல்லூரைச் சேர்ந்த மாணவி ரித்திகா கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கும், பூலாங்குடியை சேர்ந்த மாணவி திவ்யாபிரீதா, கைலாசபுரத்தை சேர்ந்த தனுஷ் ராஜ்குமார் பங்காரு  ஆகியோர் புரொடக்ஷன் என்ஜினியரிங் பிரிவில் சேர்வதற்கும் திருச்சி என்ஐடி கல்லூரியில் பதிவு செய்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக பழங்குடியின மாணவர்கள் 6 பேர் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.