Skip to main content

“தமிழ்நாட்டு மக்களிடம் தி.மு.க மன்னிப்பு கேட்க வேண்டும்” - அண்ணாமலை

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

Annamalai says DMK should apologize to the people of Tamil Nadu

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டி நேற்று (23-10-23) நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதற்காக ரசிகர்கள் நேற்று பிற்பகல் வேளையில் மைதானத்திற்கு வருகை தந்தனர். வருகை தந்த ரசிகர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

 

அப்போது ரசிகர் ஒருவர் இந்திய தேசியக் கொடியுடன் மைதானத்திற்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர், அந்த ரசிகரிடம் இருந்து தேசியக் கொடியை பிடுங்கி அதனை குப்பைத் தொட்டியில் போட முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக அந்த உதவி ஆய்வாளர் தேசியக் கொடியை கையில் வைத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியது. இதனையடுத்து, தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் வீச முயன்ற உதவி ஆய்வாளரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விமர்சனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது,”குஜராத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுப்பியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதே போல், திமுக அமைச்சர் மகனும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் அசோக் சிகாமணி, தனது அரசியல் பிரச்சாரத்தை ஒரு படி மேலே கொண்டு சென்று இன்று நமது நாட்டின் தேசியக் கொடியை அவமதித்துள்ளார். 

 

சேப்பாக்கத்தில் இன்றைய (நேற்று) போட்டிக்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?. இந்திய தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும், தமிழ்நாட்டு மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒருவேளை தவறினால், மூவர்ண கொடியின் கண்ணியத்தை காக்க தவறிய திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பா.ஜ.க தள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

அனுமன் கொடி அகற்றம்; பதற்றத்தில் கர்நாடகா!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Karnataka in tension on Removal of Hanuman flag

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கிராம் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் 108 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைத்து, அதில் அனுமன் கொடி ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் கிராம பஞ்சாயத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், தேசியக் கொடியைத் தவிர, எந்த மத, அரசியல் கொடியையும் ஏற்றக்கூடாது என்று கூறி கிராமப் பஞ்சாயத்து அந்த கோரிக்கை நிராகரித்தது.

இருப்பினும், அந்த கிராம மக்கள் சிலரும், இந்து அமைப்பினரும் சேர்ந்து, அந்த அரசு நிலத்தில் கொடிக் கம்பம் அமைத்து அதில் அனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றினர். இதையறிந்த, மாவட்ட நிர்வாகம், அரசு நிலத்தில் அனுமன் கொடியை அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, அனுமன் கொடியை அகற்றுவதற்காக அதிகாரிகள் நேற்று (28-01-24) அந்த கிராமத்திற்குச் சென்றனர். அப்போது, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். 

இருப்பினும், போராட்டம் கலையாததால் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அதன் பின்னர், அங்கு இருந்த அனுமன் கொடியை அகற்றிவிட்டு அதிகாரிகள் தேசியக்கொடியை ஏற்றினர். இதற்கு இந்து அமைப்பினரும், கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அனுமன் கொடி அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் உருவாகி வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் அனுமன் கொடி ஏற்றப்பட்டது தற்செயலாக நடந்தது அல்ல. வேண்டுமென்றே விதிகளை மீறி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பா.ஜ.க மற்றும் சங்பரிவார்களின் முன் கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் தான். கர்நாடகா மக்களை மாநில அரசுக்கு எதிராகத் திருப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு திட்டமிட்டு போராட்டம் நடத்துகின்றனர்” என்று கூறினார்.