நடிகர் விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று (17ம் தேதி) தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த கல்வி விருது விழாவில் பேசிய அவர், “உங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி நீங்க படிக்க வேண்டும். சமீப காலமாக எனக்கும் படிக்கும் ஆர்வம் வந்திருக்கு. முடிந்த வரைக்கும் படியுங்கள். எல்லா தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் படிங்க. நல்ல நல்ல விஷயங்களை தெரிஞ்சுக்கங்க” என்று பேசினார். மேலும், “சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அதில் வரும் அழகான வசனம், 'காடு இருந்தா எடுத்துக்குவானுங்க... ரூபாய் இருந்தா புடிங்கிடுவாங்க... ஆனால் படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது’ என இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் பட வசனத்தையும் பேசி படிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், “சினிமாவில் நாம் சொல்லும் ஒரு விஷயம், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவரை அது சென்றடையும்போதும் அதனுடைய நேர்மறையான தாக்கம் என்ன என்பதின் எடுத்துக்காட்டாகத் தான் பார்க்கிறேன். நாம் நமது வரலாற்றை தெரிந்துகொள்ள அம்பேத்கர், பெரியார், காமராஜருடன், அண்ணாவையும் படிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.