Skip to main content

அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

Anganwadi workers and helpers demanding transfer of officer!


தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர்களை மிரட்டும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரியான பூங்கோதையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதனை அடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் உதவி ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 

ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி பூங்கோதை இடமாற்றம் செய்யப்படவில்லை அதைத் தொடர்ந்துதான் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரி பூங்கோதையை இடமாற்றம் செய்யக் கோரி கோஷம் போட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவி தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். 

 

இதில் மாநில பொதுச்செயலாளர் டெய்சி, தலைவர் ரத்தினமாலா, இணைச்செயலாளர் சித்திரைச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும். இல்லையென்றால் மாவட்டம் மட்டுமல்ல மாநில அளவில் போராட்டம் வெடிக்கும். மேலும், பழுதடைந்த அங்கன்வாடி கட்டடங்களைச் சரிசெய்ய வேண்டும். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷமிட்டனர். அதன்பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆடசியரிடம் மனு கொடுத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அங்கன்வாடி பெண் பணியாளர் தற்கொலை; போலீஸீடம் சிக்கிய அதிர்ச்சி கடிதம்

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Female Anganwadi worker commits suicide in madurai

 

மதுரை மாவட்டம் சிம்மக்கல் தைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் அம்சவள்ளி (42). இவரது கணவர் பாலமுருகன் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல் நிலை காரணமாக உயிரிழந்தார். இவருக்கு சூர்ய நாராயணன் (21) என்ற மகன் உள்ளார். 

 

இந்த நிலையில், கணவரை இழந்த அம்சவள்ளிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கன்வாடி மைய பணியாளருக்கான ஆணை கிடைத்தது. அதன்படி, அம்சவள்ளி சிம்மக்கல் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கடந்த 4 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று (10-10-2023) காலை அம்சவள்ளியின் அறை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து, அவரது மகன் சூர்யநாராயணன் அம்சவள்ளியின் அறைக் கதவைத் தட்டியுள்ளார். அப்போது கூட கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த சூர்யநாராயணன் அக்கம்பக்கத்தினர் உதவியோடு அம்சவள்ளியின் கதவை உடைத்துள்ளார்.

 

அப்போது அம்சவள்ளி தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சூர்யநாராயணன், இது குறித்து விளக்குத்தூண் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சடலமாகக் கிடந்த அம்சவள்ளியை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

அந்த விசாரணையில், சில தினங்களுக்கு முன் அம்சவள்ளி தான் பணியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை மேல் அதிகாரியிடம் கொடுத்துள்ளார். ராஜினாமா குறித்து விளக்கம் கேட்டபோது, தனக்கும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், தான் பயன்படுத்திய லேப்டாப் உள்ளிட்டவற்றை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. 

 

இதனையடுத்து, அம்சவள்ளி தற்கொலை செய்து கொண்ட அறையைக் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில், அம்சவள்ளி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், “என் மன உளைச்சலுக்கும், நான் எடுத்த முடிவுக்கும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரியும், அவரது உதவியாளரும் தான் காரணம். என் சாவுக்கு அவர்கள் மட்டும் தான் காரணம்” என்று எழுதியிருந்தார். மேலும், அதில், ’மன்னித்துவிடு சூர்யா’ என்று தனது மகனின் பெயரைக் குறிப்பிட்டு உருக்கமாக எழுதியிருந்தார். இதையடுத்து, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

அங்கன்வாடி உணவில் பல்லி; குழந்தைகள் உட்பட 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

nn

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள் உட்பட 9 பேர் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ளது பனையங்கால் கிராமம். இக்கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பல குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்த நிலையில், இன்று மதியம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் தயார் செய்யப்பட்ட உணவை அருந்தியுள்ளனர். குழந்தைகள் ஏழு பேர், அங்கன்வாடி மையத்தில் பணிபுரிவோர் இரண்டு பேர் என மொத்தம் ஒன்பது பேர் உணவைச் சாப்பிட்ட நிலையில், அந்த உணவில் பல்லி இருந்தது தெரிய வந்தது.

 

அதனைத் தொடர்ந்து உணவு சாப்பிட்ட ஒன்பது பேரும் மயக்கமடைந்த நிலையில் அனைவரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் சிகிச்சையில் இருக்கும் அனைவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.