Skip to main content

போபால் விஷ வாயுக் கசிவை நினைவுபடுத்தும் விசாகப்பட்டிணம் கோரச் சம்பவம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

 jawahirullah


விசாகபட்டிணத்தில் நேற்று ஏற்பட்ட விசவாயுக் கசிவால் 13 பேர் பலியான சம்பவம் போபால் விஷ வாயுக் கசிவை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது. இதற்குக் காரணமான எல்ஜி நிறுவனத்திற்குக் கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே ஆர்.ஆர்.வேங்கட புரம் கிராமத்தில் உள்ள  தென் கொரியாவிற்குச் சொந்தமான எல்ஜியின் பாலிமர் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயுக் கசிவால் அக்கிராமத்தில் வசித்த 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
 

1984 இல் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தினால் ஏற்பட்ட விஷ வாயு கோர விபத்தை இது நினைவூட்டுகிறது. ஒரு குழந்தை உட்பட 13 பேர் மரணமடைந்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த விஷவாயு தாக்கத்தால் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தலா 1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
 

1984 இல் போபால் விஷ வாயுக் கசிவினால் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரம் வாழ்வாதாரமும் அழிவதற்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு விசாகபட்டிணத்தில்  தென்கொரியா நிறுவனம் ஒன்றில் நடைபெற்றிருக்கும் இந்த விபத்திற்குக் காரணமானவர்களில் எவரும் சட்டத்தின் பிடிபியலிருந்து தப்பி விட அனுமதிக்கக் கூடாது. 
 

ஊரடங்கு அமலில் இருக்கும் போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென்றும் இதற்குக் காரணமான எல்ஜி நிறுவனத்திற்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆந்திர அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


நாடு முழுவதும் இயங்கும் ரசாயனத் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுத் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் வெறுப்பு பிரச்சாரம்; ஆக்சன் எடுக்குமா தேர்தல் ஆணையம்?- ஜவாஹிருல்லா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Jawahirullah said Election Commission should take action against Modi hate campaign

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ, "ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித்  தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால், அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

Next Story

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Stone pelting on Jagan Mohan Reddy


ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு தீவிர பரப்புரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.