Skip to main content

“அரசுப்பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை”; நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Anbumani said action should be taken against those who misbehaved  government school girl

 

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்கள் மற்றும் அதனை அலட்சியப்படுத்திய ஆசிரியர் உள்ளிட்டோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று வந்த ஆறாம் வகுப்பு மாணவி, அதே பள்ளியில் உயர்வகுப்பு பயிலும் இரு மாணவர்களால் தொடர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டிய பள்ளியின் ஆசிரியர்கள் அலட்சியமாக இருந்ததுடன், மாணவிக்கு மனநிலை பாதித்து விட்டதாகக் கூறி அவமதித்திருக்கின்றனர். பெற்றோருக்கு இணையாக ஆதரவு காட்ட வேண்டிய ஆசிரியர்களின் இந்தப் போக்கு கவலையளிக்கிறது.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை அதே பள்ளியில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் பயிலும் மூன்று மாணவர்கள் தொடர்ந்து பாலியல் கொடுமை செய்து வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் மாணவர்களால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான மாணவி, அது குறித்து வகுப்பாசிரியரிடம் புகார் செய்திருக்கிறார். ஆனால், மாணவியின் புகாரை அலட்சியம் செய்த ஆசிரியர், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கிடைத்த துணிச்சலின் காரணமாக ஆகஸ்ட் 3, ஆகஸ்ட் 4 ஆகிய நாட்களிலும் அம்மாணவியை தொடர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அதனால், ஆகஸ்ட் 4ஆம் நாள் கடும் வயிற்றுவலிக்கு ஆளான மாணவி, அது குறித்து  தலைமை ஆசிரியரிடம் புகார் செய்திருக்கிறார். ஆனால், மாணவிக்கு நீதிக்கு மாறாக அநீதியே கிடைத்தது.

 

மாணவர்கள் தம்மை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக மாணவி அளித்த புகாரை விசாரிக்காத தலைமை ஆசிரியர், மாணவியின் தந்தையை பள்ளிக்கு வரவழைத்திருக்கிறார். அவரிடம், ‘‘ உங்கள் மகளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’’ என்று கூறியிருக்கிறார். போதிய கல்வியறிவு இல்லாத தந்தையும் அவரது மகளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனைக்கும், பின்னர் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தான் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து, ஆகஸ்ட் 7 ஆம் நாள் மருத்துவர்கள் முன்னிலையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சிறுமிக்கு நடத்தப்பட்ட  மருத்துவ ஆய்வில், அவருக்கு பாலியல் கொடுமை நடத்தப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

 

மருத்துவர்கள் முன்னிலையில் மாணவி தெளிவாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வழக்கின் முதல் தகவல் அறிக்கையே அரைகுறை தகவல்களுடன் தயாரிக்கப்பட்டதால் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்களை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இப்போதும் கூட குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்கள் மூவரும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குக் கூட அனுப்பப்படாமல், அதே பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால்,  மாணவி அந்த பள்ளியிலிருந்து வேறு ஓர் உறைவிடப் பள்ளிக்கு மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் தொடர அனுமதிக்கப்பட்டதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மாணவர்களை அதே பள்ளியில் படிக்க அனுமதிப்பதற்கு முன், அவர்களால் அந்த பள்ளியில் பயிலும் பிற மாணவிகளுக்கு பாதிப்பும், அச்சுறுத்தலும் ஏற்படுமா? என்பதை அதிகாரிகளும், ஆசிரியர்களும் ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

 

இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், பாதிக்கப்பட்ட மாணவி பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் நடந்து கொண்ட விதம் தான். பாலியல் தாக்குதலால் பாதிக்கப் பட்ட குழந்தைகளிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேச வேண்டும்; நடந்த குற்றத்தில் அவருக்கு தொடர்பு இல்லை - அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை புரியவைக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதைக் காயப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றமும், மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் வழங்கியுள்ளன. அவை எதையும் பின்பற்றாமல் பாலியல்  வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரை ஏற்காமல் அலட்சியப்படுத்துவதும், மாணவியை மனநலம் பாதிக்கப்பட்டவராக சித்தரிப்பதும் மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆகும். இந்த குற்றங்களை இழைத்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 

பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக இந்த வழக்கின் விசாரணையை நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளைக்  கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அதையும் கடந்து பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் 144-வது குருபூஜை விழா

Published on 08/12/2023 | Edited on 08/12/2023

 

Arumugam Navalar 144th Guru Puja Festival at Chidambaram

சிதம்பரம் மேல வீதியில் ஆறுமுக நாவலர் 144 வது குருபூஜை விழா அவர் தோற்றுவித்த சைவ பிரகாச வித்யாசாலையில் பஞ்சபுராண பாடல்களுடன் நடைபெற்றது. விழாவுக்கு ஆறுமுகநாவலர் பள்ளிக்குழு தலைவர் சேது சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிதம்பரம ஷெம்போர்டு நிறுவனரும் பள்ளியின் முன்னாள் மாணவர் விஸ்வநாதன் மற்றும் பள்ளியின் செயலாளர் அருள்மொழிசெல்வன் பள்ளியின் செயல்பாடு மற்றும் ஒழுக்கம், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள், இந்த பள்ளியில் பயின்று பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நக்கீரன் சிஎன்சி கைடு நடத்திய பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை ஊடகவியலாளர் அ. காளிதாஸ் வழங்கினார். மேலும் மாநில அளவில் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் நடத்திய விண்வெளி ஆராய்ச்சி திட்ட மாதிரி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பள்ளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை தமிழ் ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக ஞானபிரகாசம் வடக்கு குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழார் கோவிலில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் மருத்துவர் நடராஜன், மரு.பத்மினி கபாலிமூர்த்தி முன்னிலையில் குருபூஜை நிகழ்வு துவங்கி, ஆறுமுக நாவலர் சிலையை, சிதம்பரம் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக மேல வீதியில் உள்ள ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

Next Story

பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து; 30 குழந்தைகள் காயம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
School bus overturned iccident 30 children injured

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே மூங்கில்பாடி அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான பள்ளி பேருந்து பள்ளிக் குழந்தைகளுடன் மூங்கில்பாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பள்ளி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் பள்ளி பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயங்களுடன் சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து விபத்து நடந்த இடத்தில் சின்ன சேலம் வட்டாட்சியர் கமலக்கண்ணன் நேரில் சென்று விசாரணை செய்து வருகிறார். மேலும் சின்ன சேலம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 குழந்தைகள் காயமடைந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.