/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/4_248.jpg)
போட்டித் தேர்வு மூலம் தேந்ர்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 80 நாட்களாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பதா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு 80 நாட்களாகியும் அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்காமல் பள்ளிக்கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது. பணி ஆணைகள் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதில் அரசு காட்டும் தாமதம் கண்டிக்கத்தக்கது.
பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அவர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வை ஒரே நாளில் நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்க முடியும். ஆனால், 80 நாட்களாகியும் இன்று வரை அதை தமிழக அரசு செய்யாததற்கான காரணம் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய சூழலில் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆசிரியர் நியமன பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆசிரியர்கள் நியமனத்திற்கான நடைமுறை தொடங்கபட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் அது முடிவடையாதது மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் ஆசிரியர்கள் நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஆசிரியர் பணிக்கு தேந்தெடுக்கப்பட்டும் தங்களுக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா? என்ற மன உளைச்சலில் 3192 பேரும் தவித்து வருகின்றனர். அவர்களின் மன உளைச்சலைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும். எனவே, போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)