/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/THIRUMA-1.jpg)
இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் எனப் பாஜக அரசு கொண்டுவரவுள்ள திருத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மாநில உரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான பணி விதிகள் 1954ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிகளுக்கு அழைப்பதென்றால் மாநில அரசின் சம்மதத்தோடு அதைச் செய்து கொள்ளலாம் என இந்திய ஆட்சிப்பணி விதிகள் 1954இல் விதி-6 குறிப்பிடுகிறது. இதுவரை அதுவே நடைமுறையில் உள்ளது. ஆனால் இப்போது மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே ஒன்றிய அரசு இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என விதி-6 இல் திருத்தம் செய்வதற்கு பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவ்வாறு செய்வது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். அதுமட்டுமின்றி எப்போது நம்மை டெல்லிக்கு மாற்றல் செய்வார்களோ என இந்த அதிகாரிகளை அச்சத்திலேயே வைத்திருப்பதாகவும் இருக்கும். ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சி அல்லாத வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளை சீர்குலைப்பதற்கும் இது கருவியாக அமைந்துவிடும். எனவே இந்த ஆபத்தான நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளும் இதற்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)