
அதிமுகவில் பல்வேறு முட்டல் மோதல்களுக்கு பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி நீக்க, மறுபுறம் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்கி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, பின்னர் அது தொடர்பான வழக்கில் எடப்பாடி தரப்பிடம் சாவியை உயர்நீதிமன்றம் ஒப்படைத்தது.
அதிமுகவை மீட்க போவதாக சசிகலா அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் அவரது சகோதரர் திவாகரனும் அவரது கட்சியை சசிகலாவுடன் இணைத்துக்கொண்டார். இந்நிலையில் இன்றுபண்ருட்டி ராமச்சந்திரன் உடன் சசிகலா சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் இல்லத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து சசிகலா விசாரித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ''அதிமுகவின் மூத்த அரசியல் தலைவர் என்பதால் பார்த்துவிட்டு செல்லலாம் என வந்தேன். அரசியல் விஷயம் பற்றியும் கலந்து பேசிக் கொண்டோம். என்னை பொருத்தவரை அதிமுகவில் உள்ள அத்தனைபேரும் எனக்கு வேண்டியவர்கள் தான். எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'ஓபிஎஸை நீங்கள் அதிகரிக்க வேண்டும் என தேவர் சமுதாய அமைப்புகள் உங்களுக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியானதே? ஓபிஎஸ்ஸை ஆதரிப்பீர்களா?' எனகேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சசிகலா, ''எம்ஜிஆர் இந்த கட்சியை ஆரம்பிக்கும் போது ஜாதியும் பார்த்ததில்லை, மதமும் பார்த்ததில்லை. அந்த அடிப்படைக் கொள்கை இந்த நிமிடம் வரை எங்கள் மனதில் இருக்கிறது. அதனால் அதிமுக என்பது எல்லாரையும் ஒன்றாக இணைக்கிற இயக்கம். அதனடிப்படையில் தான் என்னுடைய ஒவ்வொரு நகரும் இருக்கும். எல்லாரையும் ஒன்றிணைத்து செல்லக்கூடியதுதான் அதிமுகவின் பண்பாடு. எங்கள் தலைவர் அந்த வழியைதான் எங்களுக்கு காண்பித்திருக்கிறார். அந்த வழியில்தான் நான் எடுத்துச் செல்வேன். கட்சி ஒரு நிறுவனம் அல்ல. இது எல்லாருக்குமான இயக்கம். அதை நிலை நிறுத்துவது தான் என்னுடைய கடமை. அதை நான் நிச்சயமாக செய்வேன். காலப்போக்கில் எல்லாமே சரியாகிவிடும் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)