Skip to main content

50 ஆண்டுகால போராட்டம்; வனத்தில் உரிமை பெற்ற 4 ஆயிரம் குடும்பங்கள்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
After 50 years of struggle, 4 thousand families got forest rights

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுக்காவுக்கு உட்பட்டது கல்வராயன் மலை. இந்த மலையில் 15 ஊராட்சியில் 177 கிராமங்கள் உள்ளன. சுமார் 60 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் 50 வருட கோரிக்கை நிறைவேறியுள்ள மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

சுதந்திரத்துக்குப் பின்பும் இந்த மலையை மூன்று ஜாகீர்தாரர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இம்மலைவாழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது ஜாகீர்தார்களை ஒழித்துவிட்டு அவர்களின் சொத்துகளை நாட்டுடமையாக்கினார். அப்போது இந்த மலைப்பகுதியின் நிலங்கள் வனத்துறைக்கு உரிமையானதாக மாறிவிட்டது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது மலைவாழ் மக்கள். மலையில் இருந்து பழங்குடியின மக்களை விரட்ட வனத்துறை மூர்க்கமாக செயல்படத் துவங்கியது.

காட்டை திருத்தி நிலமாக்கி வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்துவந்த பழங்குடியின மக்களை விவசாயம் செய்யக்கூடாது என தடுத்தனர். காட்டுக்குள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லவும், சுள்ளி எடுக்கவோ, தேன் எடுக்கவோ செல்லக்கூடாது என்றது. சிறிய செடிகளை பிடுங்கினாலும் பல ஆயிரம் முதல் லட்ச ரூபாய் வரை அபராதம் விதித்தனர். தொட்டதுக்கெல்லாம் அபராதம்.

After 50 years of struggle, 4 thousand families got forest rights

இதனால் வாழ்ந்த இடத்தை விட்டு கர்நாடகாவின் மைசூர், கேரளாவுக்கு தேயிலை தோட்டத்திற்கும், ரப்பர் தோட்டங்களுக்கும் வேலைக்கு செல்லத் துவங்கினார்கள். எங்கே வேலை கிடைக்குதோ அங்கே போய் வேலை செய்யறதுன்னு இடம்மாறி, இடம்மாறி நாடோடி மாதிரி வாழத் தொடங்கினர். இதனால் இவர்களின் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலை உருவானது. அரசின் வாய்ப்புகள் மலைகளில் ஓரளவு இருந்தும் வனத்துறை சட்டத்தால் இரண்டு தலைமுறைகளாக இம்மக்கள் இழந்தது அதிகம். எங்கள் முன்னோர்கள் பயிர் செய்த நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். அந்த கோரிக்கை 50 ஆண்டுகாலத்துக்கு பின்னர் நிறைவேறியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ உதயசூரியன் மற்றும் அதிகாரிகள் முதற்கட்டமாக கல்வராயன் மலை மக்கள் 4302 பழங்குடியின மக்களுக்கு நிலங்களுக்கான வன உரிமை சான்றிதழ் வழங்கியுள்ளார். அதோடு மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயப் பொருட்கள், மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் தையல் இயந்திரம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி என 118 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.