ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Advertisment

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.