Skip to main content

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; அ.தி.மு.க கவுன்சிலர் பக்கம் திரும்பிய திடீர் திருப்பம்!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
 ADMK councillor arrested Armstrong's murder case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடிவந்தனர். 

தொடர்ந்து பா.ஜ.கவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலையை கைது செய்தனர் . அதேநேரம் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே கைதான அருள் என்பவரின் செல்போன், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் 3வது வார்டு அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகித்து வரும் ஹரிதரன் என்பவரிடம் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில், வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரனின் நெருங்கிய நண்பர்தான் ஹரிதரன் என்பதும் தெரியவந்தது.

மேலும், ஹரிதரன் அளித்த தகவலின் பேரில், வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய 5 செல்போன்களை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த பிறகு 6 செல்போன்களை ஹரிதரனிடம் அருள் ஒப்படைத்துள்ளதாகவும், அந்தச் செல்போன்களை உடைத்து வெங்கத்தூர் கூவம் ஆற்றில் ஹரிதரன் வீசியதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 
 

சார்ந்த செய்திகள்