Skip to main content

அருந்ததியர்கள் வீட்டு மனைகளை ஆக்கிரமித்த ஆதிதிராவிடர்கள்; மக்கள் போராட்டம்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Adi Dravidians who occupied Arunthathiyar households

 

பண்ருட்டி வட்டம் திருவாமூர் ஊராட்சி காமாட்சிப்பேட்டை கிராமத்தில் 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 83 குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. இதில் 4 குடும்பங்கள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

 

இதகுறித்து பல ஆண்டுகளாக வட்டாட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுக்கு அருந்ததியர் மக்கள் மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அக் 11-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கட்சியின் பண்ருட்டி வட்டச் செயலாளர் ஏழுமலை தலைமையில் பாதிக்கப்பட்ட அருந்ததியர் குடும்பத்தினர் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களின் குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டத்தில் அருந்ததியர் மக்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் 12 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சரிசெய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர். இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பண்ருட்டி நகரச் செயலாளர் உத்தராபதி, நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் ஜெயபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் லோகநாதன், வட்ட தலைவர் முருகன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வினோத்குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட அருந்ததியர் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்