Acupuncture medical treatment .. Mother and child passes away

கடந்த 50 வருடங்களுக்கு முன்பு கிராமங்கள்தோறும் இருந்த மருத்துவச்சிகள் பிரசவம் பார்த்து குழந்தைகளை நலமுடன் (சுகப் பிரசவத்தில்) வெளியே எடுத்து சாதனை படைத்தனர்.ஆனால், இறப்பு விகிதம் அன்றைய காலகட்டத்தில் சற்று கூடுதலாகவே இருந்தது.

Advertisment

50 வருடங்களுக்குப் பிறகு தற்போது நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்த நிலையில், தேதி, நேரம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு குழந்தைகளை சிசேரியன் மூலம் வெளியே எடுக்கும் புதிய சிகிச்சை முறைகள் வளர்ந்துவிட்டது. இந்த நிலையில், அக்குபஞ்சர் மூலம் பிரசவத்தைக் கையாண்டு குழந்தை பெற்றெடுக்க முயற்சிசெய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பெரம்பலூர் மாவட்டம்,பூலாம்பாடியைச் சேர்ந்தவர் விஜயவர்மன் (35). இவர் அக்குபஞ்சர் முறை வைத்தியர், இவரது மனைவி அழகம்மாள்(29). இளங்கலை மருத்துவச் செவிலியர் பயின்றுள்ளார்.திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில், அழகம்மாள் கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனைக்கு கிராம சுகாதார செவிலியர்கள் அழைத்தபோது எங்களுக்கு ஆங்கில மருத்துவம் வேண்டாம். இயற்கை முறையில் குழந்தை பெறுவதற்கான வழிமுறைகளை நாங்களே தேடிக் கொள்கிறோம் எனக் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் அழகம்மாளுக்கு கடந்த சனிக்கிழமை 09.01.2021 இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை அளித்த போது ஆண் குழந்தை இறந்தே பிறந்தது.

அழகம்மாளின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா எஸ்.பி.யிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில்,அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தப் புகாரில் அழகம்மாளின் இறப்பு கொலை என்றும் அவருக்கு அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்ப்பதாகக்கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.