Skip to main content

‘உலக அதிசயம்’லட்சியம்! நிறைவேறிய சரத்குமாரின் காமராஜர் மணிமண்டப கனவு!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

மதுரை-  திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி அருகில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியிருக்கிறார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இம்மணிமண்டபத்தை, காமராஜரின் 117-வது பிறந்த தினமான இன்று,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்திருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது. அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாஃபா பாண்டியராஜன், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.  

 


தலைமைச் செயலகத்தில் பேசிய ராதிகா “தன் வாழ்நாளில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பதை லட்சியமாகக் கருதி, அதற்காக உழைத்து, உருவாக்கிக் காட்டியிருப்பவர் சரத்குமார். அவருடைய கனவு நனவானதை மிகுந்த மகிழ்ச்சியோடு இன்று நான் பார்க்கிறேன். சரத்குமாரின் மனைவி என்ற முறையிலும், நீண்ட நாள் நண்பர் என்ற உரிமையோடும், இந்த உணர்ச்சி மிக்க நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் அனைவரையும் அவர் சார்பிலும், என் சார்பிலும் அன்புடன் வரவேற்கிறேன்.” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய வரலட்சுமி “எனது தந்தை சரத்குமாருக்கும், அவருடைய அறக்கட்டளை சார்பில் எல்லாருக்கும் நன்றி கூறுகிறேன்.” என்றார்.

 

 

ACTOR SARATHKUMAR  Kamarajar Manimandaba's dream

 

 

இதே வேளையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,  பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ்,  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  ஆகியோர் காமராஜர் மணிமண்டப விழாவை நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள், காமராஜர் விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நேற்று மணிமண்டப வளாகத்தில் தனது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிய சரத்குமார், இன்று  விழா மேடையில் பேசிய “பெருந்தலைவர் சிலையையும், அணையா தீபத்தையும், நீரூற்றையும், மணிமண்டபத்தையும் முன் வந்து மகிழ்ச்சியோடு திறந்து வைத்திருக்கின்ற முதலமைச்சருக்கும், தொழிலதிபர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி.” என்றார். 

 

 

ACTOR SARATHKUMAR  Kamarajar Manimandaba's dream

 

 

ராதிகா கூறியது போல், இம்மணிமண்டபத்துக்காக சரத்குமார் உழைத்ததன் பின்னணியையும், அவருடைய பங்களிப்பையும் பார்ப்போம்! 12 வருடங்களுக்கு முன், 2007 ஏப்ரல் 29- ஆம் தேதி காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய சரத்குமார் “22 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மணிமண்டபம் உலக அதிசயங்களில் ஒன்றாகப் பேசப்படும். வெறும் நினைவு மண்டபமாக இல்லாமல், மிகப்பெரிய நூலகம், ஆஸ்பத்திரி, தியான மண்டபம், யோகா மையம், இளைஞர்கள், மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கணினி மையம் போன்றவை இங்கே அமைக்கப்படும்.” என்று அறிவிக்கவும் செய்தார். அடிக்கல் நாட்டு விழாவானது,  நாடார் அமைப்புகள் கொண்டாடிய குடும்ப விழாவாக அப்போது அமைந்தது.

 

 

ACTOR SARATHKUMAR  Kamarajar Manimandaba's dream

 

 

 

சரத்குமாரை திமுக ஓரம் கட்டியிருந்த நிலையில், அன்று கூடிய கூட்டம் அவருக்குத் தெம்பளித்தது. அடுத்த நான்கு மாதங்களில், 2007, ஆகஸ்ட் 31- ஆம் தேதி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். எர்ணாவூர் நாராயணன், கரு.நாகராஜன் போன்ற நாடார் பேரவையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் ச.ம.க.வுக்குள் ஐக்கியமானார்கள். பின்னாளில் விலகியும் சென்றனர். எர்ணாவூர் நாராயணனோ, ச.ம.க.வை உடைத்து சமத்துவ மக்கள் கழகம் என்ற புதுக்கட்சியை 2016-ல் தொடங்கினார். தமிழகத்தின் இருபெரும் திராவிட கட்சிகளும், சரத்குமாரை ’ரசிக்காத’ நிலையில், காமராஜர் மணிமண்டப சிந்தனை மீண்டும் உயிர்பெற்றது. “ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். மணிமண்டப பணிக்கு 1 ரூபாய் நன்கொடை அளித்தாலும் பெற்றுக்கொள்வோம்.” என்றெல்லாம் கூறி, வெகு பிரயத்தனப்பட்டிருக்கிறார். மணிமண்டப பரப்பளவு சுருங்கிவிட்ட போதிலும்,  பிற்காலத்திலாவது உலக அதிசயங்களில் ஒன்றாக காமராஜர் மணிமண்டபத்தை அமைத்தே ஆகவேண்டும் என்ற தனது லட்சியத்தில் உள்ளுக்குள் இன்னும் உறுதியாகவே இருக்கிறார் சரத்குமார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாணவிகளுக்கு மஞ்சப்பையில் மரக்கன்றுகள் வழங்கிய பசுமைப் பள்ளி ஆசிரியர்கள்!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024

 

தமிழ்நாடு அரசு ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதியை கல்வி நாளாக கொண்டாடி வருகிறது. இந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் இனிப்புகள், சர்க்கரைப் பொங்கல் வழங்கியும் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தியும் பரிசுகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமின்றி 7.5% உள் இடஒதுக்கீட்டில் 4 ஆண்டுகளில் 19 மாணவிகளை மருத்துவர்களாகவும் அதற்கு முன்பு பல மருத்துவர்களையும், பலநூறு பொறியாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்களையும் உருவாக்கிய, பிளாஸ்டிக் ஒழித்து சில்வர் தண்ணீர் குடுவை, மண்பானையில் தண்ணீர், பசுமையைப் போற்றி தமிழ்நாட்டிற்கே முன்னோடிப் பள்ளியாக விளங்கும்  கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை பசுமைப் புரட்சி செய்யும் விதமாக கொண்டாடியுள்ளனர்.

அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் தினத்தில் மாணவிகளுக்கு வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்து உபசரிப்பது போல கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்தநாளை ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்க்கும் விதமாக செய்ய வேண்டும் என முடிவெடுத்த பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் 1100 மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்குவதுடன் மஞ்சப்பையில் வைத்து மரக்கன்றுகள் வழங்க முடிவெடுத்தனர்.

அதன்படி நேற்று மாலை பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி தலைமையில் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காமராஜரை போற்றும் பாடல்களை மாணவிகள் பாடினர். வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியதுடன் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி மற்றும் எஸ்எம்சி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பசுமையைப் போற்றும் மஞ்சப்பையில் மரக்கன்றுகளை மாணவிகளுக்கு வழங்கி கடலை மிட்டாய்களும் வழங்கினர். மாணவிகளும் உற்சாகமாக மரக்கன்றுகளை வாங்கிச் சென்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறும் போது, கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளி உருவானதில் இருந்து தொடர்ந்து சாதிக்கும் பள்ளியாகத் தான் உள்ளது. நீட் வருவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் ஒன்று, இரண்டு மாணவிகள் மருத்துவம் படிக்கவும், ஏராளமான மாணவிகள் பொறியியல், பட்டம், வழக்கறிஞர், ஆசிரியர் பயிற்சி படிக்கவும் சென்றனர். ஆனால் நீட் வந்த சில ஆண்டுகள் எங்கள் மாணவிகள் தடுமாறினார்கள். ஆனாலும் சோர்ந்து போகாமல் முயற்சி செய்தனர். அப்போது தான் தமிழ்நாடு அரசு அரசுப பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீடு அறிவித்தனர். அந்த ஆண்டில் தொடங்கி தொடர்ந்து 19 மாணவிகளை மருத்துவம் படிக்க அனுப்பி உள்ளோம். அதே போல பல்வேறு படிப்புகளிலும் சாதிக்கின்றனர். தேர்ச்சியிலும் சாதித்தோம்.

மேலும், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதமாக மண்பானையில் தண்ணீர், சில்வர் குடுவையின் பயன்பாட்டை கொண்டு வந்தோம். பள்ளி வளாகம் பசுமை இப்படி பல்வேறு முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தோம் இதன் பயனாக பல்வேறு விருதுகள் கிடைத்தது இப்போது தமிழ்நாடு அரசின் பசுமைப் பள்ளியாக தேர்வாகி உள்ளது.

அதேபோல காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 ஐ கல்வி நாள் என்பதை மாணவிகள் மறந்துவிடக் கூடாது என்பதால் எப்போது அவர்கள் பார்வையில் இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சப்பையில் மரக்கன்றுகளை ஆசிரியர்கள் சொந்த செலவில் வழங்கி இருக்கிறோம். இந்த கன்றுகளை நடும் மாணவிகள் ஒவ்வொரு நாளும் அதனைப் பார்த்துவிட்டு தான் பள்ளிக்கு வருவார்கள் இதனால் 1100 மரங்களையும் வளர்க்கிறோம் என்று பெருமையாக உள்ளது என்றனர்.

இந்தப் பள்ளியின் இந்தத் தொடர் சாதனைக்காக கல்வித்துறை அமைச்சர் விரைவில் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

Next Story

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியைத் தடுத்து நிறுத்திய வனத்துறை; கட்சியினர் வாக்குவாதம்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
nn

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028 ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர்.

குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பை தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருநெல்வேலி மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘மாஞ்சோலையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான உரிமம் வருகிற 2028 ஆம் ஆண்டில்தான் முடிவடைகிறது. இந்த உரிமத்தை புதுப்பிதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்காமல், இங்கு வாழக்கூடிய மக்களை அங்கிருந்து காலி செய்யக்கூடிய நடவடிக்கையை அரசும், தேயிலைத் தோட்ட நிர்வாகமும் எடுத்து வருகிறது. எனவே, இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை வெளியேற்றுவதால் மறுவாழ்வுக்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. குறிப்பாக, மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்படும் போது மாஞ்சோலையைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். மேலும், மறு பணி வாய்ப்பு வழங்கும் வரை ஒரு குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்க வேண்டும். இழப்பீடு தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கும் வரை மாஞ்சோலையில் இருந்து யாரும் வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், ‘நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மேலும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது.

nnஇந்நிலையில் நெல்லையில் மாஞ்சோலை மக்களைச் சந்திப்பதற்காக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்றுள்ளார். அனுமதியை மீறி அவர் அதிகமாக வாகனங்களில் சென்றதாக மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சற்று பரபரப்பு ஏற்பட்டது.