கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் 137 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை குறிப்பிட்டு" இந்த குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். காந்தியைப் போலவே நீங்கள் மக்களின் இதயங்களுக்குள் நுழைந்தீர்கள். அவரைப் போலவே நீங்கள் உங்களின் மென்மையான வழியில் பெரும் சக்திகளை அன்புடனும் பணிவுடனும் அசைக்க முடியும் என்பதை நிரூபித்தீர்கள். துணிச்சலோ நெஞ்சு படபடக்கவோ இல்லாமல் உங்களது. நம்பகமான அணுகுமுறையால் மக்கள் புதிய காற்றை சுவாசிக்க உள்ளனர். பிரிவினையை நிராகரிப்பார்கள் என்று கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள். அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றி பெற்ற விதத்திற்கும் பாராட்டுக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.