/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adv-malar-art_10.jpg)
கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தகுமார்(43) இவர் தனது தாய் கமலேஸ்வரி(60) மற்றும் 10 வயது மகனுடன் காராமணிக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். சுகந்தகுமாருக்கு இரு திருமணமாகி இரண்டு மனைவிகளையும் பிரிந்து தாய் மற்றும் 2வது மனைவிக்குப் பிறந்த 10 வயது மகனுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சுகந்தகுமார், கமலேஸ்வரி, 10 வயது மகன் மூவரும் வெட்டிக்கொன்று எரிக்கப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளனர். பின்பு வீட்டில் இருந்து துர்நாற்றமும், புகையும் வெளி வந்ததால் அருகே இருந்தவர்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று மூவர் உடலையும் கைப்பற்றி பிரேதப்பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுற்றியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சுகந்தகுமாரின் எதிர்வீட்டில் வசிக்கும் சங்கர் ஆனந்த் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் நோட்டமிட்டதில் சங்கர் ஆனந்த் திடீரென தலைமறைவாகியுள்ளார். மேலும் சங்கர் ஆனந்தின் கையில் ஒரு விரலில் வெட்டுப்பட்டுக் கட்டுப்போட்டிருந்ததும் போலீசாருக்கு கூடுதல் சந்தேகத்தையும் கொடுக்க, தலைமறைவாக இருந்த ஆனந்தை செல்போன் சிக்னல் மூலம் தேடினர். அதில் சென்னை மறைமலைநகர் பகுதியில் பதுங்கி இருந்த சங்கர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் சாகுல் அமீது இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சங்கர் ஆனந்த், எனது அம்மாவிற்கும் சுகந்தகுமாருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக ஊரில் பலரும் பேசினர். அதனால் மனமுடைந்த எனது தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்காக சுகந்தகுமாரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் பெங்களூரில் பாதி நாளும் வீட்டில் பாதி நாளும் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அவரது மகனை அழைத்துக் கேட்டபோது அவன் என்னை மரியாதை இல்லாமல் திட்டினான். அதனால் அவனை நான் அடித்ததை அவனது பாட்டி கமலேஸ்வரியிடம் கூறி அவர், என்னைக் கடுமையாகத் திட்டினார். காரி துப்பி அசிங்கப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சுகந்த குமாரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்ய நானும் எனது கூட்டாளிகளும் சேர்ந்து 13 ஆம் தேதி இரவு சுகந்தகுமார் வீட்டின் கதவைத் தட்டினோம். அப்போது கதவைத் திறந்த சுகந்தகுமாரை வெட்டி கொலை செய்தேன் பதிலுக்கு அவர் என் கை விரலை வெட்டிவிட்டார். பின்பு எங்களைத் தாக்க வந்த கமலேஸ்வரியையும் கொலைசெய்தேன். 10 வயது சிறுவனை வெளியேவிட்டால் மாட்டிக்கொள்வோம் என்று கூறி அவனையும் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.
பின்பு மறுநாள் பக்கத்து வீட்டு வழியாகத் தப்பித்துச் சென்றோம். ஆனால் துர்நாற்றம் வந்தால் மாட்டிக்கொள்வோம் என்று 14 ஆம் தேதி நண்பர் சாகுல் அமீதிடம் பெட்ரோல் வாங்கி வரச்சொல்லி மீண்டும் வந்து மூன்று பேரின் உடலிலும் ஊற்றி எரித்துவிட்டேன். பின்னர் வீட்டிலிருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுவிட்டோம். இதனிடையே சுகந்தகுமார் வெட்டியதில் எனது கட்டை விரல் பாதி துண்டாகித் தொங்கிக்கொண்டிருந்தது. அதனை வெட்டி புதரில் வீசிவிட்டு சென்னைக்கு வந்து தலைமறைவாகிவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார் இதனைத் தொடர்ந்து கொலைவழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)