Skip to main content

தலை ஆடி... கரோனாவால் களையிழந்த தேங்காய்ச் சுடும் பண்டிகை!!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

aadi festival yesterday peoples

 

தலை ஆடியன்று வீட்டுக்கு வீடு உற்சாகமாகக் கொண்டாடப்படும் தேங்காய்ச் சுடும் பண்டிகை, இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் வழக்கத்தை விட உற்சாகம் குறைந்து காணப்பட்டது. 

 

ஆடி மாதத்தின் முதல் நாளை, தலை ஆடி பண்டிகையாக ஹிந்துக்கள் காலங்காலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில், புதுமணத் தம்பதியினர், தலை ஆடி தினத்தன்று காவிரி, வைகை, பாலாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம். மணமான பெண்கள், புதுத்தாலி அணிந்து கொள்ளும் சடங்குகளும் நடைபெறும்.

 

இதுமட்டுமின்றி, வீடுகளின் முன்பு தீ மூட்டி, தேங்காய்ச் சுடும் பண்டிகையும் தலை ஆடியன்று விமர்சையாகக் கொண்டாடப்படும். தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளுக்கே உரித்தான விழாவாக தேங்காய்ச் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

முற்றிய தேங்காயைத் தேர்வு செய்து வாங்கி, முக்கண்களில் ஒரு கண்ணில் மட்டும் துளையிட்டு அதில் உள்ள நீரை வெளியேற்றுகின்றனர். அந்தத் துளையின் வழியே ஊற வைத்த பச்சை அரிசி, நாட்டு சர்க்கரை, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை முழுதாகவோ அல்லது அரைத்தோ போடுகின்றனர். தேங்காயில் இருந்து தனியாக எடுத்து வைத்த நீரும் அதில் ஊற்றிய பிறகு, துளையில் நீளமான அழிஞ்சி மரக்குச்சி அல்லது மூங்கில் குச்சியை சொருகி, தீயில் சுட்டு எடுக்கின்றனர். 

 

தேங்காய்க்குள் இட்ட பூரணம் வெந்த பிறகு கிளம்பும் வாசனையைக் கொண்டு தேங்காயும் பதமாக வெந்ததாக அறிந்து கொள்கின்றனர். பின்னர், தீயில் சுட்ட தேங்காயை கடவுள் முன்பு படையிலிட்டு, அதன் பிரசாதத்தை குடும்பத்துடன் உண்டு மகிழ்கின்றனர். வாழ்வில் எல்லா நாளும் மகிழ்ச்சியும், இன்பமும் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்த ஆண்டு, கிராமங்களில் கூட இப்பண்டிகை பெரிய அளவில் உற்சாகமாகக் கொண்டாடப்படவில்லை. பரவலாக வீடுகள் அருகே தீமூட்டி தேங்காய்ச் சுட்டனர். முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து தேங்காய் சுடும் விழாவைக் கொண்டாடினர்.

 

http://onelink.to/nknapp

 

வழக்கமாக, தலை ஆடியையொட்டி அதிகாலை முதலே மலர்ச்சந்தை முதல் காய்கறி, பழங்கள், மளிகைப் பொருள்கள் என வியாபாரம் களைகட்டும். மேட்டூர், மோகனூர் உள்ளிட்ட காவிரி ஆறுகளில் புதுமணத்தம்பதிகள் முதல் இளைஞர்கள் வரை நீராட குவிவதும், அங்குள்ள கோயில்களில் வழிபடுவதுமாகக் கூட்டம் நிரம்பி வழியும்.

 

கரோனா ஊரடங்கால் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும் மேட்டூர் காவிரி ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடியும் புனித நீராட புதுமணத்தம்பதிகளோ, இளைஞர்கள் கூட்டமோ இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. கிராமங்களில் சிறு கோயில்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், அங்கு மட்டும் ஓரளவு பக்தர்கள் வழிபாடு நடந்தது. மாநகர பகுதிகளில் கோயில்களில் வழிபடத் தடை நீடிப்பதால் பக்தர்கள் வீடுகளிலேயே விளக்கேற்றி வழிபட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

'வெளியே வரமாட்டோம்...' -ஊரடங்கு முடிந்தும் வீட்டை விட்டு வெளியே வராத குடும்பத்தினர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Shocking incident in Kumari where the family did not come out of the house even after the corona lockdown

 

வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவிற்கு பிறகும் இரண்டு வருடங்களுக்கு மேலாக தங்களது குடும்பத்தாரை வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசித்து வருபவர் பேசியஸ் அலெக்சாண்டர்-மாலதி தம்பதியினர். இவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்த இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் தந்தையான அலெக்சாண்டர் குடும்பத்தாரை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்தது.

 

புகாரை அடுத்து சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். வீட்டின் வெளிப்பக்க கேட் உள்பக்கமாக பூட்டிய நிலையில் அதை திறக்க வலியுறுத்தியும் யாரும் திறக்கவில்லை. இதனால் எகிறி குதித்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள் பூட்டிய வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த வழக்கறிஞரான பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் பேச்சு கொடுத்தனர். அப்பொழுது பெர்சியஸ் அலெக்சாண்டரின் மனைவி மாலதி 'எங்க எல்லோருக்கும் கொரோனா வந்து இருக்குன்னு கொண்டு போகணும் அவ்வளவு தானே உங்களது திட்டம்' என்று கேள்வி எழுப்பினார். பின்னர் பேசிய மாலதி தங்களுக்கு சொந்தமான கடையில் இருந்து கொண்டு வாடகை தராமல் ஒரு நபர் தங்களை கொல்ல முயற்சிப்பதாகவும், அவரால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் தங்களை தாக்குவதற்கு சிலர் மறைந்திருப்பதாகவும் அதனால் தாங்கள் வீட்டுக்குள்ளே இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அப்பொழுது தீயணைப்பு அதிகாரி ஒருவர் பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் 'இரண்டு வருடங்களுக்கு முன்பு கடைக்கு முன்பாக பிரார்த்தனை எல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்களே' என கேட்டதற்கு 'ஆமாம் அதைத்தான் இங்கே செய்து கொண்டிருக்கிறோம்' என்றார் பெர்சியஸ். இப்படி எந்தவிதத்திலும் பிடிகொடுக்காமலும் சரியான காரணத்தை சொல்லாமலும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராமல் அடம்பிடிக்கும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.