Skip to main content

'800' திரைப்பட விவகாரம் -கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் விளக்க அறிக்கை!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

 

800 film sri lanka former cricket player muttiah muralitharan statement

 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் '800' திரைப்பட விவகாரம் தொடரபாக, முத்தையா முரளிதரன் மூன்று பக்கங்களை கொண்ட விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

அதில் கூறியுள்ளதாவது;, "இதுநாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன் அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன்.

 

என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

 

இலங்கையில் தேயிலை தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலையக தமிழர்கள்தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு ஜே.வி.பி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

 

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார், என் சொந்தங்களில் பலர் பலியாகினர், வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போரால் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை அதன் மத்தியிலேயேதான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம் தான் 800.

 

இது இப்போது பல்வேறு காரணங்களுக்குக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான், உதாரணமாக நான் 2009 ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019- ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்.

 

ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்து பாருங்கள் போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு எது நடக்கும் என்பது தெரியாது, என் பள்ளிகாலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான், வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம், இப்படிபட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்ததால் கடந்த பத்து வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கிற கருத்தினை தெரிவித்தேன். ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன்.

 

அடுத்து எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ்வழியில் படித்து வளர்ந்தவன்தான் எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றுமொரு தவறான செய்தி. தமிழ் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர் என முரளி கூறுகிறார் என சொல்கின்றனர். இயல்பாகவே சிங்களர்கள் மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்வதால் எல்லோரிடமும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கதான் செய்யும் அது இயற்கை அது என்னிடத்திலும் இருந்தது காரணம் எனது பெற்றோரும் கூட அப்படிப்பட்ட சிந்தனையில் தான் இருந்தார்கள். அதையும் மீறி கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் பள்ளியின் கிரிக்கெட் அணியில் என்னை பங்கேற்க தூண்டியது. எனது முயற்சியால் அணியில் சேர்ந்தேன் எனது திறமையால் நான் ஒரு தவிர்க்க இயலாதவனாக மாறினேன். எனவேதான் தாழ்வுமனப்பான்மையை தூக்கி எறிந்து உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள் என்ற எண்ணத்தில்தான் கூறினேன்.

 

என்னை பொறுத்தவரையில் சிங்களர்களாக இருந்தாலும், மலையக தமிழர்களாக இருந்தாலும், ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒரு மலையக தமிழனாக நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழ மக்களுக்கு செய்த உதவிகளே அதிகம்.

 

செய்யும் நன்மைகளை சொல்லிக்காட்டுவதை என்றைக்கும் நான் விரும்புவதில்லை ஆனால் இன்று அதை சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். ஐ.நா வின் உணவு தூதராக இருந்தபோது 2002 ஆம் ஆண்டு LTTE-யின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்த திட்டத்தை எடுத்து சென்றது முதல் பின் சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான் செய்த உதவிகளை அந்த மக்கள் அறிவர்.

 

போர் முடிவுற்ற பின் கடந்த பத்து வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான FOUNDATION OF GOODNESS மூலம் ஈழ மக்களுக்கு செய்யும் உதவிகள் தான் அதிகம். ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எனது தொண்டு நிறுவன கிளைகள் மூலம் குழந்தைகள் கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் என பல வகைகளில் பல உதவிகள் செய்து வருகிறேன். மக்கள் நல்லிணத்துக்காக வருடா வருடம் MURALI HARMONY CUP என்கிற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடத்தி வருகிறோம். இன்னும் இதுபோல் ஏராளமான விடயங்கள் உள்ளது. நான் இலங்கை அணியில் இடம் பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம் பெற முயற்சித்திருப்பேன் இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா?

 

இவை அனைத்தும் விடுத்து அவர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது.

 

எவ்வளவு விளக்கமளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும் என்னைப் பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன்" இவ்வாறு முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

Next Story

“பச்சை துரோகம்” - விஜய் சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vijay sethupathi election video

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் அன்றே நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தி.மு.க, காங்கிரஸ், இடது சாரிகள், வி.சி.க, உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனி கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க தேசிய ஜனநாயக கூடணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதையொட்டி தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விஜய் சேதுபதி வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பேசியதாவது, “நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தா நமக்கென்ன... இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்... ஒட்டு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை... இது போன்ற மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.   

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. 

நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலைத் பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்க, என்ன சொல்றாங்க என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க. இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்க” என்றார்.