Skip to main content

பாஜக நிர்வாகி படுகொலை; வெளியான பகிர் வாக்குமூலம்

 

6 people arrested in case passed away BJP executive

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முன்விரோதத்தில் அவரை வெளிமாநிலங்களைச் சேர்ந்த கூலிப்படையினரை வைத்து தீர்த்துக் கட்டியிருக்கும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.  

 

திருப்பத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கலி கண்ணன் (45). இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். பழைய இரும்பு கடை வைத்திருந்தார். அத்துடன், குடிநீர் கேன் விநியோகத்திலும்,  வட்டித்தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 6 ஆண்டுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்த கலி கண்ணன், திருப்பத்தூர் நகர துணை செயலாளராக இருந்து வந்தார். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், குடும்பத்தைப் பிரிந்து திருப்பத்தூர் செட்டி தெருவில் உள்ள மேன்ஷனில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வேப்பாளம்பட்டியில் உள்ள ஒரு குவாரி அருகே, கலி கண்ணனின் சடலம் நவ. 24ம் தேதி காலையில் கைப்பற்றப்பட்டது. மர்ம நபர்கள் அவரை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை வீசிச் சென்றது தெரியவந்தது. கலி கண்ணனின் சடலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

 

சில மாதங்களுக்கு முன்பு நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய சில கருத்துகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவருடைய அலைபேசிக்கு மர்ம நபர்களிடம் இருந்து மிரட்டலும் வந்தது. இது தொடர்பாக அவர் திருப்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இப்படியான நிலையில், கலி கண்ணன் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மத ரீதியான விவகாரம் இருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, திருப்பத்தூரில் வட்டித்தொழில் செய்து வரும் ஹரிவிக்னேஷ் (23) என்பவருக்கும், கலி கண்ணனுக்கும் கடந்த 2016ம் ஆண்டு சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. அப்போதே ஹரி அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இது தொடர்பாக, அப்போது திருப்பத்தூர் காவல்நிலையத்தில் ஹரிவிக்னேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹரிவிக்னேஷ் அண்மையில் நீதிமன்றத்தில் பிணை உத்தரவு பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அந்த முன்விரோதம் காரணமாக பழிதீர்க்கும் நோக்கத்தில் கலி கண்ணன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

 

பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்தால் மத ரீதியான மோதல்கள் உருவாகிவிடக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பும், அவருடைய சொந்த ஊரிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்ட காவல்துறையினரும் இந்த சம்பவம் குறித்து ஒரே நேரத்தில் தீவிர விசாரணையில் இறங்கினர்.

திருப்பத்தூரில் கலிகண்ணன் தங்கியிருந்த மேன்ஷன் அருகே பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். நவ. 23ம் இரவு 11 மணியளவில் மேன்ஷனை விட்டு கீழே இறங்கி வந்த கலி கண்ணனை, திருப்பத்தூர் ஹரிவிக்னேஷ் தலைமையில் வந்த ஒரு கும்பல், காரில் கடத்திக்கொண்டு ஊத்தங்கரை சாலையில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது தெரியவந்தது.

 

அதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் ஊத்தங்கரை விரைந்தனர். கொலையாளிகள் ஓசூரில் பதுங்கி இருந்த இடத்தைக் கண்டுபிடித்த திருப்பத்தூர் காவல்துறையினர், அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். ஹரி உள்பட 6 பேரை கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட குற்றவாளிகளை ஊத்தங்கரை காவல்நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கலி கண்ணனை, ஹரிதான் கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கேரளா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த கூலிப்படையினரை இந்தக் கொலையில் ஈடுபடுத்தியுள்ளார்.

 

காவல்துறையினரிடம் ஹரிவிக்னேஷ் அளித்த வாக்குமூலம்:

கடந்த 2016ம் ஆண்டு, சொத்து தகராறு தொடர்பாக கலி கண்ணனை கத்தியால் வெட்டினேன். இதில் பலத்த காயம் அடைந்த அவர் என் மீது திருப்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கில் என்னை காவல்துறையினர் கைது செய்தனர்.

சமீபத்தில்தான் இந்த வழக்கில் பிணை உத்தரவு பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தேன். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்பதால், வழக்கை திரும்பப் பெறும்படி சொன்னேன். இருவரும் சமாதானமாக போய் விடலாம் என்றும் கலி கண்ணனிடம் கூறினேன்.

ஆனால், அவர் வழக்கை திரும்பப் பெற மறுத்துவிட்டார். பலமுறை கெஞ்சிக் கேட்ட பிறகும் அவர் மசியவில்லை. இதனால், என்னை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அவரை தீர்த்துக்கட்டிவிட எண்ணினேன்.  என் திட்டத்தை செயல்படுத்த உள்ளூரைச் சேர்ந்த ரவுடி மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த கூலிப்படை கும்பலையும் பயன்படுத்திக் கொண்டேன்.

 

கலி கண்ணனை காரில் கடத்திக்கொண்டு ஊத்தங்கரை அருகே சென்றபோது, வெற்று பத்திரத்தில் கையெழுத்துப் போடும்படி மிரட்டினேன். அப்போதும் அவர் ஒத்துக்கொள்ளாததால் வேறு வழியின்றி, ஓடும் காரிலேயே அவரை கழுத்தறுத்துக் கொலை செய்தோம். பின்னர், சடலத்தை ஊத்தங்கரையில் ஒரு குவாரி அருகே வீசிவிட்டுத் தப்பிச்சென்று விட்டோம். இவ்வாறு வாக்குமூலத்தில் ஹரி தெரிவித்துள்ளார்.

முக்கியக் குற்றவாளியான ஹரிவிக்னேஷ், கூலிப்படை ரவுடியான திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பனூரைச் சேர்ந்த அருண்குமார், கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அருண், ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஆனந்தன், நவீன்குமார் ஆகிய 6 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் இன்னும் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. சடலம் கைப்பற்றப்பட்ட ஒரே நாளில் முக்கியக் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களைக் கைது செய்வதில் ஈடுபட்ட உள்ளூர் காவல்துறையினர், உளவுப்பிரிவு, குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !