
கோபி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், திங்களூர் அருகே உள்ள நிச்சாம்பாளையம், ராமநாயக்கனூரைச் சேர்ந்தவர் கோபால்சாமி. 26 வயதான இவருக்கு திருமணமாகி 6 மாத ஆண் குழந்தை உள்ளது. கோபால்சாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
கடந்த 28ம் தேதி இரவு 10 மணியளவில் கோபால்சாமி மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தது ஏன் என மனைவி கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் சண்டையாக மாறியது. இதையடுத்து, வீட்டில் இருந்து வெளியேறிய கோபால்சாமி, விவசாய பயிருக்கு தெளிக்கும் களைக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார். இது குறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபால்சாமியை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே கோபால்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.