புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பதுங்கியிருக்கும் ரவுடிகளை பிடிக்க மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தரவின்படி தனிப்படைகள் அமைத்துத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பிணையில் வந்துள்ள "காவல் நிலைய சரித்திரப் பதிவேடு ரவுடிகள்" தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பலர் அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு தயாராகும் நிலையில் தலைமறைவாகி உள்ளவர்களை தனிப்படை போலிசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நெடுவாசல் கிழக்கு பகுதியில் பன்னீர் (வயது 58) என்பவரது வீட்டில் சில ரவுடிகள் தங்கி இருப்பது பற்றிய தகவல் கிடைத்து எஸ் பி யின் தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன் டீம் நெடுவாசலில் குறிப்பிட்ட வீட்டைச் சோதனை செய்தது. அப்போது அங்கிருந்து ஒரு காரில் சிலர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை வடகாடு காவல் ஆய்வாளர் தனபாலுக்கு, தனிப்படை போலிசார் கூறியுள்ளனர். இதனையடுத்து வடகாடு காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் இருந்தவர்கள் சந்தேகத்திற்கிடமாக பதில் சொன்னதால் அனைவரையும் விசாரித்துக் கொண்டிருந்த போது ஒருவர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். மீதமிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில், உடையாளிப்பட்டி காவல் நிலைய சரித்திர குற்றப் பதிவேட்டில் உள்ள ரவுடிகளான திருச்சி திருவரம்பூர் தாலுகா, பூலாங்குடி பாரத் நகர் ரெத்தினசாமி மகன் பாலாஜி (வயது 33), புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீழையூர் நடராஜன் மகன் குருமூர்த்தி (வயது 32) எனத் தெரியவந்தது.
அதே பொனோன்று ஆலங்குடி காவல் நிலைய சரித்திரப் பதிவேட்டு ரவுடியான ஆலங்குடி கம்பர் தெரு, ராசு மகன் விஜயமார்த்தாண்டன் (வயது 41), தப்பி ஓடிய நபர் ராப்பூசல் கிராமத்தைச் சேர்ந்த மாத்தூர் அண்ணாநகரில் வசிக்கும் பழனியாண்டி மகன் பாலு (எ) பாலமுத்து (வயது 45). இவரது பெயர் மாத்தூர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்ற பதிவில் உள்ளவர் என்பது தெரிய வந்தது. மேலும், இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டில் தங்க வைத்திருந்த நெடுவாசல் பன்னீர் என்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து காரை சோதனை செய்த போது காருக்குள் அரிவாள்கள், கத்தி, இரும்பு குழாய் மற்றும் 9 செல்போன்கள், ரூ. 65 ஆயிரம் பணம் இருந்தது. கார் மற்றும் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்த வடகாடு போலீசார் தப்பி ஓடிய பாலமுத்துவை தேடிச் சென்றனர். அப்போது அவர் தடுமாறி விழுந்ததில் கால் உடைந்துள்ளது. அதனால் பாலமுத்துவை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்த போலீசார் மற்ற 4 பேரையும் கைது செய்துள்ளனர். நெடுவாசல் பகுதியில் சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் ஆயுதங்களுடன் தங்கி இருந்தது ஏன்?. இந்தப் பகுதியில் ஏதேனும் சம்பவம் நடத்தத் திட்டமிட்டுத் தங்கி இருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.