'நீட்ஸ்' திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 'புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்' (நீட்ஸ்) என்ற திட்டம், அந்தந்த மாவட்ட தொழில் மையம் மூலமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில் கடனுதவி பெற, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பட்டப்படிப்பு/ பட்டயப்படிப்பு/ தொழில் பயிற்சி தேர்ச்சி பெற்ற 21 வயது முதல் 35 வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். சிறப்புப் பிரிவினருக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர், முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும். 'நீட்ஸ்' திட்டத்தின் மூலம் வங்கிக் கடனுதவி பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும். சுயதொழில் துவங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையத்தளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
இணையதத்ளத்தில் கல்வித்தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தற்போது, தமிழக அரசு நீட்ஸ் திட்டத்திற்கு மாவட்ட அளவிலான நேர்காணலுக்கு விலக்கு அளித்து அறிவித்துள்ளது. மேலும், 1.3.2020 முதல் 31.3.2020 ஆம் தேதி வரையிலான நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்தும் விலக்கு அளித்தும் ஆணை வழங்கியுள்ளது. பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு தகுதியின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும்.
சேலம் மாவட்டத்தில் ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் மேற்கண்ட சலுகைகளுடன் கூடிய திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சுய தொழில் துவங்கி பயனடைய ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, 0427- 2448505, 2447878 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது, சேலம் 5 சாலை அருகில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.