Skip to main content

கடனை அடைக்க 4 வயது குழந்தையை பீரோவில் அடைத்து கொலை செய்த கொடூர பெண்!

 

g

 

கன்னியாகுமாி மாவட்டம் முட்டம் அருகே உள்ளது கடியபட்டணம் மீனவ கிராமம். அங்குள்ள பாத்திமா தெருவைச் சேர்ந்த ஜான் ரிச்சாா்ட் (40) சௌதி அரேபியாவில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சகாய சில்ஜா (32) இந்த தம்பதிகளுக்கு ஜோகன் ரிஷி (4) மற்றும் 4 மாதத்தில் ஒரு கை குழந்தையும் உள்ளது.  இந்த நிலையில் நேற்று (21-ம் தேதி) மதியம் 11.30 மணியளவில் குழந்தை ஜோகன் ரிஷி வீட்டின் அருகில் தனியாக விளையாடி கொண்டிருந்தான். இதை வீட்டில் வேலை செய்து கொண்டியிருந்த தாய் சகாய சில்ஜா அடிக்கடி கவனித்து கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் கைக்குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக வீட்டுக்குள்ளே இருந்திருக்கிறாள் சகாய சில்ஜா. பினனா் கொஞ்சம் நேரம் கழித்து வெளியே வந்த சகாய சில்ஜா விளையாடிக் கொண்டிருந்த மகனை காணாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாள். 

 

பின்னா் அக்கம் பக்கத்தில் தேடியும் குழந்தையை காணவில்லை. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் காட்டுத் தீ போல் பரவியது. மேலும் கடற்கரையையொட்டி வீடு இருப்பதால் கடலுக்குள் குழந்தை தவறி விழுந்திருக்குமோ என்ற எண்ணத்தில் அந்த பகுதியில் உள்ள மீனவா்கள் கடற்கரைக்கு சென்று தேடினாா்கள். ஆனால் அங்கு குழந்தை செல்வதற்கான வாய்ப்பு இல்லையென்று உறுதி படுத்தினாா்கள். இதையொட்டி குழந்தை பற்றிய தகவலை சமூக வலைதளங்களிலும் பரவ விட்டனா். மேலும் மணவாளக்குறிச்சி போலீசிலும் புகாா் கொடுத்தனா்.

 

இந்த நிலையில் போலீசாா் குழந்தை ஜோகன் ரிஷி கழுத்தில் அணிந்திருந்த ஓரு பவுன் செயின் மற்றும் கையில் போட்டிருந்த அரை பவுன் பிரேஸ்லெட் நகைக்காக யாராவது கடத்தியிருப்பாா்களா? என்ற கோணத்தில் விசாரணையை நடத்தினாா்கள். அப்போது அவா்களுக்கு கிடைத்த பல்வேறு தகவலின் அடிப்படையில் அதே தெருவில் வசிக்கும் பாத்திமா (50) என்ற பெண்ணை பிடித்து விசாாித்ததில் நகைக்காக அவள் குழந்தையை கடத்தி கொலை செய்து இருப்பது தொிய வந்தது.


              
இது குறித்து போலீசாா் கூறும் போது... பாத்திமா அந்த பகுதியில் உள்ள ஏராளமானவா்களிடம் கடன் வாங்கியிருப்பதும் மேலும் வாங்கிய கடனை யாருக்கும் திருப்பி கொடுக்கும் பழக்கம் இல்லாதவள். இந்த நிலையில் அந்த பகுதியை சோ்ந்த பெண் ஒருவருக்கு 40 ஆயிரம் கொடுக்க வேண்டுமாம். அந்த பெண் தினமும் அவளிடம் சண்டை போட்டு பணம் கேட்டு வந்ததால் கடைசியாக இந்த மாதம் 25-ம் தேதிக்குள் தருவதாக கூறியுள்ளாா்.

 

இந்த நிலையில் தான் அந்த பெண்ணுக்கு பணம் கொடுப்பதற்காக விளையாடி கொண்டிருந்த ஜோகன் ரிஷியை அன்பாக பேசி வீட்டுக்குள் அழைத்துச் சென்று அந்த குழந்தையின் கழுத்தில் கிடந்த செயின் மற்றும் கையில் கிடந்த பிரேஸ்லெட்டை பறித்து விட்டு அந்த குழந்தையின் வாயில் துணியை சுத்தி வைத்து கை கால்களை கட்டி வீட்டுக்குள் இருந்த பீரோவுக்குள் வைத்து விட்டாள். சுமாா் அரை மணி நேரத்தில் குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு அப்படியே இறந்து விட்டது.

 

பின்னா் இரவு குழந்தையை கடலில் வீசுவதற்காக திட்டமிட்டிருந்தாள். இதற்கிடையில் குழந்தையிடம் இருந்து கழற்றிய நகையை மணவாளக்குறிச்சியில் தனியாா் நகை அடகு கடையில் வைத்து 55 ஆயிரம் ருபாய் வாங்கி விட்டு அதில் 40 ஆயிரத்தை கடன் கொடுக்க வேண்டிய பெண்ணிடம் கொடுத்து இருக்கிறாள். இது அந்த பெண்ணுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு இரவு குழந்தையின் உடலை கடலில் வீச முயன்று இருக்கிறாள் அப்போது அங்கு ஆட்கள் இருந்ததால் முடிய வில்லை. பின்னா் அவளின் வீட்டில் புதைப்பதற்காக குழி தோண்டியிருக்கிறாள்.
           

இந்த நிலையில் தான் அவள் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்த விசயம் வெளியே வர ஊா் மக்களும் அவள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவளின் வீட்டுக்குள் சோதனை செய்ததில் பீரோவுக்குள் குழந்தையை கொலை செய்து வைத்தியிருப்பது தொியவந்தது என்றனா் போலீசாா். இதைத் தொடா்ந்து ஊா் மக்கள் ஒன்றாக அவளின் வீட்டை அடித்து உடைத்து பொருட்களையும் சேதப்படுத்தினாா்கள். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியதையடுத்து போலீசாரும் குவிக்கப்பட்டனா். இதை தொடா்ந்து பாத்திமாவையும் போலீசாா் கைது செய்தனா்.