Skip to main content

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தாளாளர் உள்பட மூவர் கைது

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

3 people including school principal in Nellai were arrested by POCSO

 

நெல்லையின் மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் செல்கிற சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அக்கம்பக்கமுள்ள பகுதிகளின் சுமார் 900 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த குதுபுதீன் நஜீம் என்பவர் அப்பள்ளியின் தாளாளராக உள்ளார். காதர் அம்மாள் பீவி இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்.

 

இந்நிலையில், தாளாளர் குதுபுதீன் சில மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து உடல் வலிப்பதாகக் கூறி கை கால்களை அமுக்கிவிடுமாறு கூறி பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், நடந்ததை வெளியே சொன்னால் ஃபெயில் ஆக்கிவிடுவதாக அவர்களை மிரட்டியும் வந்துள்ளாராம். இச்சூழலில் கடந்த 4ம் தேதியன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மூன்று மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்த தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்தாகத் தெரிகிறது. இதனால் பீதியடைந்த மாணவிகள் சகமாணவிகளிடம் தெரிவிக்க, அதிர்ந்து போன மாணவிகள் நியாயம் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், பாலியல் தொந்தரவு சம்பவம் மூன்று மாதங்களாக நடந்ததாகவும் தகவல்கள் கசிகின்றன.

 

3 people including school principal in Nellai were arrested by POCSO
தாளாளர் குதுபுதீன் நஜீம்

 

மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டம் பற்றி அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் முஸ்லீம் அமைப்பினர் திரண்டு வந்து நடவடிக்கை கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். சம்பவ இடம் வந்த மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் உள்ளிட்டோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று பொதுமக்கள், முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

இது குறித்து பாளை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி உள்ளிட்ட போலீசார் பள்ளியின் தாளாளர் குதுபுதீன் நஜீமை பிடித்து விசாரணை நடத்தியதின் அடிப்படையில் தாளாளர் குதுபுதீன் நஜீம், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் காதர் அம்மாள் பீவி, தாளாளரின் மனைவி உட்பட மூன்று பேர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பாகக் காணப்பட்ட மேலப்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.