28 people arrested for gambling with money in Dindigul

திண்டுக்கல் மாநகரையொட்டி உள்ள மீனாட்சிநாயக்கன்பட்டியில் இருக்கும் ஒரு காம்ப்ளக்ஸ், வத்தலக்குண்டு பைபாஸ், அஞ்சலி பைபாஸ், சீலப்பாடி பைபாஸ் இப்படி நகர்ப்பகுதியைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும், நகரில் கோவிந்தாபுரம், நாகல் நகர், பேகம்பூர், பஸ் ஸ்டாண்டு பகுதிகள் உள்பட சில இடங்களிலும் அரசு அனுமதியில்லாமல் அங்கங்கே சூதாட்ட கிளப்புகள் இரவு பகல் பாராமல் படுஜோராக நடந்து வந்தன. இதனால் வியாபாரிகள், விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோர்கள் இந்தச் சூதாட்ட விடுதிகளுக்கு சென்று பல ஆயிரங்களை இழந்தும் வந்தனர்.

Advertisment

இந்த விசயம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் காதிற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் கொண்டு சென்றனர். அத்துடன் எஸ்.பிக்கு தனிப்படை போலீசாரும் தகவல் கொடுத்து இருந்தனர். அதைத் தொடர்ந்துதான் எஸ்.பி உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப் இன்ஸ்பெக்டர்கள் அருண்நாராயணன், பூபதி மற்றும் சில காவலர்கள் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் அதிரடி நடவடிக்கையில் இறங்கி அனுமதியில்லாமல் சூதாட்ட கிளப்புகளில் ரைடு நடத்தினர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள் சிலர் தப்பி ஓடியுள்ளனர்.

Advertisment

இருப்பினும், ஆண்கள் மற்றும் சூதாட்ட கிளப் நடத்தி வந்தவர்கள் உட்பட 28 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். ஆனால் இதேபோல் நத்தம், வத்தலக்குண்டு, வேடசந்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், மேல் மலைப்பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சில பகுதிகளில் அனுமதியில்லாமல் சூதாட்ட கிளப்புகள் படுஜோராகவும் நடந்து வருகிறது. அதேபோல் அனுமதியில்லாமல் சில்லிங் சென்டர்களும் அங்கங்கே நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் மாவட்ட அளவில் எஸ்.பி.பிரதீப் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளும் விடுத்து வருகிறார்கள்.