25 crore worth of land owned by Palani Murugan recovered!

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான சொத்துக்களை பக்தர்கள் தானமாக வழங்கி உள்ளனர். இச்சொத்துக்களில் பல ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், சொத்துக்களை மீட்க துரிதநடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

Advertisment

இதன்படி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை கண்டறிவது, ஆக்கிரமிப்பு விபரங்களை கண்டறிவது, சொத்துக்களை மீட்பது தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பது போன்றவற்றுக்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

Advertisment

இதன்படி, பழனி கோயிலுக்கு பக்தர்கள் தானமாக வழங்கிய 60.42 ஏக்கர் புஞ்சை நிலம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, பெரியகுமாரபாளையம் கிராமத்தில் இருந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த 6 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது தொடர்பாக பழனி கோயில் நிர்வாகம் சார்பில் தாராபுரம் சார்பு நீதிமன்றம், கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம், சென்னை ஐகோர்ட் மற்றும் டெல்லி உச்சநீதிமன்றம் வரை உரிமை கோரி வழக்கு தொடரப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளாக நடந்த சட்ட போராட்டத்தில் இந்நிலங்கள் பழனி கோயிலுக்கு சொந்தமானவை எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

25 crore worth of land owned by Palani Murugan recovered!

இதன் அடிப்படையில், வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் 60.42 ஏக்கர் நிலம் நேற்று மீட்கப்பட்டது. திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி அணையர் அனிதா, பழனி சரக ஆய்வாளர் கண்ணன் ஆகியோரால் பழனி கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் இந்நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பழனி கோயில் துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.25 கோடி என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுசம்மந்தமாக பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் கேட்டபோது, “இதுபோல் பல இடங்களில் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அது சம்மந்தமாக கோர்ட்டில் வழக்கும் நிலுவையில் இருப்பதால் கூடிய விரைவில் அந்த இடங்கள் மீட்கப்படும் அதுபோல் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இருக்கிறது. அந்த கடைகளுக்கு வாடகையும் செலுத்தி வருகிறார்கள். அது இல்லாமல் கோயில் இடங்களை ஆக்கிரமித்து கடைகள் ஏதும் வைத்திருந்தாலும் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.