23 snakes caught in one day; Bustle in government transport workshop

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையிலிருந்து ஒரே நாளில் 23 பாம்புகள் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து பணிமனை ஊரின் மையப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் உள்ள நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை வளாகத்தில் அப்புறப்படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்து டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் செடிகள் முளைத்து விஷ ஜந்துக்கள் இருப்பிடமாக அந்த இடம் மாறியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து புகாரளித்த நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள டயர்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்பொழுது அங்கு விஷப் பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பாம்பு பிடிக்கும் நபர்கள் பலர் வரவழைக்கப்பட்டு நல்ல பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட 23 பாம்புகள் ஒரே நேரத்தில் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட பாம்புகள் அனைத்தும் மூட்டையில் அடைக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. போக்குவரத்து பணிமனையில் இருந்து ஒரே நேரத்தில் 23பாம்புகள் பிடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.