Skip to main content

200வது நாளைத் தொடும் வேங்கைவயல் விவகாரம்; 4 சிறுவர்களை நேரில் வரச் சொன்ன நீதிபதி

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

200th Anniversary of Vengaiyal Affair; 4 Objections to DNA testing of children

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் நடந்து 199 நாட்கள் ஆகிவிட்டன. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் 179வது நாளாக விசாரித்து வருகின்றனர்.

 

இந்த சம்பவத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இருந்து நீதிமன்ற உத்தரவுப்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதுவரை 21 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 10 ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில் வேங்கைவயல் வழக்கு விவகாரம் தொடர்பாக மேலும் இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவர் என 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி வேண்டும் எனக் கேட்கப்பட்டு வழக்கு வரும் 12ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. 12ம் தேதி (இன்று) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது சிறுவர்களின் பெற்றோர்களையும் அழைத்து வர நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதன்படி சிறுவர்களின் பெற்றோர்கள் ஆஜராகினர். அப்பொழுது வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் பெற்றோர் தங்களுக்கு ரத்த மாதிரி கொடுக்க விருப்பமில்லை. பாதிக்கப்பட்ட எங்களையே குற்றவாளியாக்கும் முயற்சியில் மீண்டும் மீண்டும் சிபிசிஐடி போலீஸ் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் நாங்கள் ரத்த மாதிரி கொடுக்க முடியாது என அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதேபோல் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களின் பெற்றவர்களிடம் நீதிபதி ஜெயந்தி விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது, “உங்கள் பிள்ளைகளை கூட்டிவரச் சொன்னோம். ஏன் கூட்டிவரவில்லை” எனக் கேட்க, “பசங்க பள்ளிக்கூடம் போய்ட்டாங்க” எனக் கூறினர். “வரும் 14ம் தேதி 4 சிறுவர்களை நேரில் அழைத்து வர வேண்டும். அந்த சிறுவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டியிருக்கிறது. அதற்கு பிறகு தான் அந்த நான்கு சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்யலாமா அல்லது கூடாதா என உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கடைசியில் ரத்தான முதல்வரின் நிகழ்ச்சி; வெடித்து நின்ற கட்டிடம் - வெளுத்துவாங்கிய அமைச்சர்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Minister Meyyanathan angry because building to be inaugurated by cm was of poor quality

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(18.7.2024) பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.264.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 956 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 12 ஆய்வகங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள், திருவண்ணாமலையில் மாவட்ட முதன்மை  கல்வி அலுவலகத்துடன் இணைந்த ஒருங்கிணைந்த கல்வி வளாகம் போன்றவற்றை காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முன் ஏற்பாட்டுப் பணிகள் அந்தந்த பள்ளி வளாகங்களில் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்தப் பகுதியில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வி நிர்வாகம் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் சட்டமன்றத் தொகுதி தேக்காட்டூர் பள்ளி திறப்பு விழாவில் அமைச்சர் ரகுபதியும், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி குழந்தை விநாயகர் கோட்டை அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டடம் திறப்பு விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மெய்யநாதன் பள்ளி வளாகத்திற்கு வந்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் முதல்வரின் திறப்பு விழா நிகழ்வு ரத்தானது. 

Minister Meyyanathan angry because building to be inaugurated by cm was of poor quality

இதனைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார். அப்போது, கட்டிடம் வெடித்து நின்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து கோவமடைந்த அமைச்சர் மெய்யநாதன், “இந்த கட்டிடம் கட்டிய எஞ்சினியர் யார், அவரை கூப்பிடுங்க” என்று ஆவேசமாகக் கேட்க, பவ்யமாக வந்து நின்றார் எஞ்சினியர், “இது என்ன வேலை தரையெல்லாம் பினிசிங் ஆகல, இப்படித்தான் வேலை பார்ப்பிங்களா?” என்று கோபமாகக் கேட்டதோடு அருகில் கட்டப்பட்டுள்ள புதிய கழிவறை கட்டிடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர், லைட் எங்கே இருக்கு என்று கேட்க இன்னும் ஒயரிங் செய்யல என்று பதில் சொல்ல எதுவும் பேசமுடியாத கோபத்தில் அங்கிருந்து அகன்றார்.

மேலும் இன்று முதலமைச்சர் திறந்து வைக்க வேண்டிய அந்த பள்ளி கட்டடம் சுவர் முழுவதும் வெடித்தும், ஆங்காங்கே  சிமெண்ட் பூச்சுகள் உடைந்து தொட்டால் கொட்டும் நிலையிலும் காணப்பட்டது. இது போன்ற கட்டடங்களைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தரம் ஆய்வு செய்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதலமைச்சர் கையால் திறப்பு விழா காண இருந்த பள்ளி வகுப்பறை கட்டடம் இப்படி மோசமாக உள்ளதை பாரத்து அமைச்சர் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘மேலும் ஒரு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது’ - போலீசார் அதிரடி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
In another case MR. Vijayabaskar Arrested Police Action

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.  மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் ஏற்கனவே  எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர்  மீது அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 7 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் புகாரின் பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் இத்தகவலை தெரிவிப்பதற்காக நீதிமன்றத்தில் வாங்கல் காவல் துறையினர் பெற உள்ளனர்.