
வடலூரில் வள்ளலாரின் சத்திய ஞானசபையில் ஒவ்வொரு ஆண்டும் தைபூச விழா பிப்ரவரி மாதத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கு கடலூர் மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாவட்ட தலைவர் எஸ்.கே. பக்கீரான் கடந்த 19 ஆண்டுகளாக டன் கணக்கில் காய்கறிகள் மற்றும் 5,000 தண்ணீர் பாட்டில்கள், 100 மூட்டை அரிசி உள்ளிட்டவைகள் வள்ளலார் சபைக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறார். இந்நிலையில் பிப் 10-ந்தேதி வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைபூச விழாவிற்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிப் 11-ந்தேதி தைபூசம் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து சன்மார்க்க அன்பர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள்.
இந்த விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு பசி இல்லாமல் உணவு அளிக்கும் வகையில் கடலூரில் இருந்து சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் எஸ்.கே பக்கீரான் 20-வது ஆண்டாக பிப் 10-ந்தேதி கடலூரில் இருந்து வள்ளலார் சத்தியஞான சபை அன்னதான கூட்டத்திற்கு பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கடலூர் மாநகரத் தலைவர் தொழிலதிபர் ஜி.ஆர்.துரைராஜ் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்கத்தின் மண்டல தலைவர் டி.சண்முகம், திமுகவின் மாநகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட அமைப்பாளர் ஆர். அமர்நாத், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மருத்துவர் சதீஷ்குமார், யுவராஜ், ஏ.வி.சதீஷ், ஆகியோர் கலந்து கொண்டு கடந்த ஆண்டை விட 2 மடங்காக 25 டன் பல்வேறு காய்கறிகள், 2600 கிலோ அரிசி, 5 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களை 2 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து எஸ்.கே.பக்கிரான் கூறுகையில், “இஸ்லாமியரான எனக்கு மதங்களைக் கடந்து ஜாதிகளை கடந்து மனிதநேயம் காத்த வள்ளலாரை சிறுவயதிலிருந்து மிகவும் பிடிக்கும்.பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு பசியை போக்கியவர் வள்ளலார். வாடிய பயிரை காணும் போதெல்லாம் என் உள்ளமும் வாடியது என்று சொன்னவர் வள்ளலார். அந்த ஈடுபாடுடன் 20 ஆண்டு காலமாக மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வடலூர் சத்திய ஞான சபைக்கு என்னால் முடிந்த அளவிற்கு பொருட்களை அனுப்பி வருகிறேன். இன்னும் அதிகமாக வரும் ஆண்டுகளில் அனுப்புவேன்” என்கிறார். மேலும், “இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இங்கு சகோதரர்களாக வாழ்கின்றோம். இந்த சகோதரத்துவத்தை வலியுறுத்தியும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறேன்” என்று கூறினார். இஸ்லாமியர்களுக்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிட்டு மதகலவரத்தை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு மனிதநேயம் மதத்தில் இல்லை என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் பல கட்டங்களில் தொடர்ந்து காட்டிக்கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் திருந்துவார்களா? என்று தெரியவில்லை. என்கிறார்கள் இந்நிகழ்சியை வேடிக்கை பார்த்தவர்கள்.