சேலத்தில், டாஸ்மாக் மேலாளர் மகளிடம் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 சகோதரர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி இந்துமதி (26). இவருடைய தந்தை மாதேஸ்வரன். இவர் சேலம் டாஸ்மாக்கில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இந்துமதி, அன்னதானப்பட்டி காவல்துறை உதவி ஆணையர் அசோகனிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ''ஏற்காடு அடிவாரம் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸ்காட், ஜோசப் ஸ்காட், பிரான்சிஸ் ஜேம்ஸ்காட், மைக்கேல் எரால்டு, ஜான் வால்டர் ஸ்காட், பீட்டர் ஜேம்ஸ் ஸ்காட், ஐரின் கிரிஸ்டோபர் ஆகிய 7 சகோதரர்கள் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு என்னிடம் வந்து, பத்திரம் எழுதிக் கொடுத்து 20 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றனர்.
அவர்கள் இதுவரை பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகின்றனர். மேலும், கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, புகாரில் கூறப்பட்டுள்ள 8 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.