2 rowdies arrested for kidnapping case in pondycheery

புதுச்சேரி குருவாம்பேட் பருதியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர், கடந்த 6ஆம் தேதி இரவு பூத்துறை இந்திராநகர் பகுதியில்,தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது 4.பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்றதாக அவருடைய தாயார் புவனேஸ்வரி வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா, வழக்குப் பதிவு செய்து கடத்தப்பட்ட அரவிந்தை தேடிவந்தனர். இந்த நிலையில் அவர் புதுச்சேரி மங்கலம் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள அய்யனார் கோயில் அருகில் வெட்டுக்காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர்.

Advertisment

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், காரைக்காலில் நடந்த கொலை வழக்கில் நான் சாட்சி சொன்ன காரணத்தால் அந்தக் கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடியான புதுச்சேரி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் தலைமையிலான நாலு பேர்கொண்ட கும்பல்தான் என்னை கடத்திச் சென்று வெட்டிக் கொலை செய்ய முயன்றது என அரவிந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

அரவிந்தைக் கடத்தி கொலைசெய்ய முயன்ற கும்பல்,பூத்துறை பங்களாமேடு பகுதியில் மறைந்து இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து வானூர் போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடி ராஜேஷ், தப்பி ஓடும்போது பள்ளத்தில் விழுந்ததில், அவருடைய கால் முறிந்தது. அவரையும் சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய இன்னும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வாலிபரைக் கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு ரவுடிகளை போலீசார் விரைந்து பிடித்துள்ளதைக் கண்டு காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களைப் பாராட்டி உள்ளனர்.