Skip to main content

நொடியில் பறிபோன 2 உயிர்கள்; துடிதுடித்துப்போன குடும்பம்!

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
2 children electrocuted in Cholavaram

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அமைந்துள்ளது கண்ணியம்பாளையம் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. 40 வயதான இவர், விவசாயம் சார்ந்த தொழில்களைச் செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஷ்வா என்பவருக்கு 12 வயதாகிறது. அங்குள்ள அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகன் சூர்யா என்பவருக்கு 10 வயதாகிறது. இவரும் அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில், குடும்பத் தலைவர் முனுசாமி தனது விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்துத் தனது குடும்பத்தைப் பாதுகாத்து வந்தார். கணவனும் மனைவியும் சேர்ந்து தங்களுடைய மகன்களை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தனர். இத்தகைய சூழலில், முனுசாமியின் மகன்களான விஷ்வா மற்றும் சூர்யா ஆகிய இருவரும் பள்ளி விடுமுறை நாட்களில் அக்கம்பக்கத்தில் உள்ள தனது நண்பர்களுடன் விளையாடச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 16 ஆம் தேதியன்று விஷ்வா மற்றும் சூர்யா ஆகிய இருவரும் தங்களுடைய வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளியில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது, ஒருவரை ஒருவர் ஓடிப் பிடித்துக்கொண்டு அந்த வயல்வெளியில் அங்கும் இங்குமாய் சென்றுகொண்டிருந்தனர். அந்த மகிழ்ச்சியான தருணத்தில்தான் அந்த பச்சிளம் சிறுவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.  அவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வயல்வெளிக்கு அருகில் ஒரு விவசாய பம்பு செட் இருந்துள்ளது.

அப்போது, அதைப் பார்த்தவுடன் அந்த இரண்டு சிறுவர்களும் விவசாய பம்பு செட் அருகே சென்றுள்ளனர். அந்த நேரத்தில் வயல்வெளியிலிருந்து பம்பு செட்டிற்கு ஒருவர் பின் ஒருவர் என வேகமாக ஓடியுள்ளனர். அதே வேளையில், அந்த பம்பு செட்டில் மின்கசிவு ஏற்பட்டு அந்த இடம் முழுவதும் மின்சாரம் பரவி இருந்தது. ஆனால், அதையெல்லாம் அறியாத சிறுவர்கள் அந்த வழியாகச் சென்றுள்ளனர்.  அப்போது, விவசாய பம்பு செட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் திடீரென யாரும் எதிர்பாராத சமயத்தில், அந்த 2 பச்சிளம் சிறுவர்களின் உடலில் மின்சாரம் பாய்ந்து அங்கிருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் விஷ்வா மற்றும் சூர்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள், அவர்களுடைய தந்தை முனுசாமிக்கு தகவல் தெரிவித்தனர். 

அப்போது, இதைக் கேட்ட முனுசாமி மற்றும் அவரது உறவினர்கள் கண்ணீர்விட்டுக் கதறிக்கொண்டே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பிணமாக இருக்கும் தங்களது இரண்டு மகன்களின் உடலைப் பிடித்துக்கொண்டு கதறித் துடித்தனர். தங்களுடைய 2 மகன்களையும் பறிகொடுத்த நிலையில், முனுசாமி - ஜீவா தம்பதியினர் உயிரிழந்த மகன்களைப் பார்த்து கண்ணீரில் தத்தளித்தனர். அந்த நேரத்தில், இதைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சோழவரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பம்பு செட்டில் மின்கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அதே சமயம், வயல்வெளியில் விளையாடச் சென்றபோது மின்சாரம் தாக்கி சகோதரர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்