ml

Advertisment

18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதி எம்.சத்யநாராயணன் முன்பு 7வது நாளாக வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர். முதல்வர் பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் 3வது நாளாக வாதங்களை முன்வைத்தார்.

முதல்வர் தரப்பில் வாதம் " முதல்வருக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா என ஆளுநர் கருதக்கூடிய நிலையை 18 எம்.எல்.ஏக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதன்மூலம், அவர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக விட்டுக் கொடுத்து விட்டதாகவே தான் கருதமுடியும். அதனால் தான் 18 எம்‌எல்‌ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். முதல்வரை மாற்ற கோரி 18 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர். ஆனால், முதல்வரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது. ஆளுநருக்கு அளித்த கடிதம்; சபாநாயகர் முன் வைத்த வாதங்கள்; இந்த மனுவின் கோரிக்கை என அனைத்திலும் எடியூரப்பா வழக்கையே மனுதாரர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். ஆனால் தலைமை நீதிபதி அமர்வில் இருவரும் அந்த வழக்குடன் இந்த வழக்கை ஒப்பிடவில்லை.

அரசியல் விவகாரத்தில் ஆளுநர் தலையிட முடியாது. ஆளுநருக்கு கடிதம் அளித்தது. ஆளுநரை எதிர்கட்சி தலைவர் சந்தித்தது போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளே தகுதி நீக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. 18 எம்.எல்.ஏ.-க்கள் அளித்த கடிதத்தின் அடிப்படையில், தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று வாதத்தை முன்வைத்தனர். முதல்வர் தரப்பு வாதங்கள் முடிவடைந்தது.

Advertisment

நாளை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தரப்பில் வாதங்களை முன்வைக்க இருப்பதாக தெரிவித்தனர். அதை ஏற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். நாளை அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி ஆஜராகி வாதிட உள்ளார்.