Skip to main content

கோடை இளவரசிக்கு 175வது பிறந்த நாள்... கொண்டாட முடியாமல் பொது மக்கள் ஏமாற்றம்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
Kodaikanal



கொடைக்கானலின் 175வது பிறந்தநாள் தினத்தை கொண்டாட முடியாமல் பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 1845ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது தங்களது படைகளை பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது குதிரை மூலமும், டோலி கட்டியும் உயரதிகாரிகள் கொடைக்கானல் மலைக்கு சென்று வந்தனர்.

அப்பகுதியில் உள்ள சீதோஷணம் தங்களுக்கு ஒத்துப்போகவே ஆங்கிலேயர்கள் நிரந்தரமாகத் தங்கினர். அதன் அடிப்படையில்தான் மே 26-ஆம் தேதி கொடைக்கானல் கண்டுபிடிக்கப்பட்ட நாளாக மாவட்ட  நிர்வாகம் அறிவித்தது. அதன் பின்னர் தன்னார்வலர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மே 26ஆம் தேதியன்று கொடைக்கானல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

 


கடந்த இரண்டு வருடங்களாக அரசு சார்பில் விழா எடுக்கப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த ஊரடங்கு முடிந்த பின்னர் கோடை  இளவரசியின் 175 வது பிறந்தநாளை  கொண்டாட கொடைக்கானல் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் அரங்கேறிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சம்பவம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள மலை பிரதேச பகுதிகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதி அதிக குளிராக இருப்பதால், கோடை காலத்தில் அதிகமான நபர்கள் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் சமீபத்தில் குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளான, கேரளாவைச் சேர்ந்த சில இளைஞர்கள், ஆபத்து நிறைந்த குணா குகைக்கு தடையை மீறி செல்கின்றனர்.

அப்போது, அங்குள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து விடும் ஒருவரை, அவரின் சக நண்பர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவதுதான் கதை. இந்தப் படம் வெளியானது முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல், இந்தத் திரைப்படம் வெளியானதில் இருந்து, கொடைக்கானலுக்கும் குணா குகைக்கும் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து 3 நாட்கள் கிடைத்த விடுமுறை தினத்தில் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல நண்பர்கள் குழு ஒன்று திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 22 வயதான தனராஜ் மற்றும் அவரின் நண்பர்கள் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள், வழக்கமாக சுற்றுலா செல்லும் இளைஞர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அது அனைத்தையும் செய்து மகிழ்ந்துள்ளனர். அப்போது அவரவர் புகைப்படங்களை வித விதமாக எடுத்து மகிழ்ந்துள்ளனர். பின்னர், கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதிக்குச் சென்ற நண்பர்கள், அங்கிருந்து நடந்து சென்று டால்பின் நோஸ் சுற்றுலாப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

இந்தப் பகுதி கொடைக்கானலில் உள்ள ஆபத்தான இடங்களுள் இதுவும் ஒன்று. டால்பின் மீனின் மூக்குப்பகுதி போன்று இந்தப் பாறை அமைந்துள்ளதால் இந்த இடம் இவ்வாறு பெயர் பெற்றுள்ளது. ஆனால் இங்குள்ள ஆபத்தை உணராத தனராஜ் செல்ஃபி எடுக்கும் நோக்கத்துடன், டால்பின் நோஸ் பாறை பகுதியின் முனைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரின் கால் சட்டென்று வழுக்கியுள்ளது. உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மேலே இருந்து அலறியபடி பொத்தென்று சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார் தனராஜ். இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவரின் நண்பர்கள், அந்த ஆபத்தான இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

கை கால்களில் பலத்த காயங்களுடன் தனராஜ் கீழிருந்து கதறியுள்ளார்.உடனே அவரின் நண்பர்கள் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர், வனத்துறையினர் என அனைவரும் உடனடியாக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கயிறு கட்டி 100 அடி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் தனராஜை உயிருடன் மீட்டுள்ளனர். கீழே விழுந்த தனராஜிக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

இதன் காரணமாக படுகாயமடைந்த தனராஜை உயிருடன் தீயணைப்பு துறையினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும் போது, கொடைக்கானல் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய பகுதி மட்டுமில்லை. இது ஆபத்து நிறைந்த பகுதியுமாகவும் இருக்கிறது. அழகும் ஆபத்தும் உள்ளதை, சிலர் அறியாது ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல ஆசைப்படுகின்றனர். வனத்துறை சார்பாக ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட போதிலும், சிலர், எச்சரிக்கையையும் மீறி செல்வதால் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆபத்தை உணர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

Next Story

கொடைக்கானலில் 'காட்டுத்தீ' - சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
'Forest Fire' in Kodaikanal Hill

கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் காட்டுதீ ஏற்படும் நிலையில், சீதோஷ்ன நிலை மாற்றத்தின் காரணமாக தற்போதே காட்டுத்தீ ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக கொடைக்கானலில் ஒரு சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதிகள் மட்டுமல்லாது வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களிலும் தீயானது பரவி வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் பெருமாள் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதனால், கிட்டத்தட்ட 50 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து வனச்சரக பணியாளர்கள் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ தடுப்பு கோடுகள் இடப்பட்டுள்ளதால் விரைவில் தீ பரவல் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில் அதில் இடம்பெற்றுள்ள குணா குகையை பார்வையிட இந்த கோடையில் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அன்று தேனி, குரங்கணி பகுதியில் கொழுக்குமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில், ட்ரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.