/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_47.jpg)
பென்னாகரம் அருகே, பரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (45). உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, வேலைக்குச் செல்லாமல் உறவினர்களுடன் மதுபானம் குடித்துவிட்டு சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, அவருடைய வீட்டின் முன்னால் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவருடைய தலையின் பின்பக்கத்தில் ரத்த காயம் இருந்துள்ளது. குடிபோதையில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் அல்லது யாராவது அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதுகுறித்து கணேசனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கணேசன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பென்னாகரம் அருகே உள்ள மாரண்டஅள்ளி புதூரைச் சேர்ந்தவர் முரளி. இவர், கொலையான கணேசனின் தங்கை கணவர் ஆவார். அவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவர், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருப்பூரில் உள்ள ஒரு துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மது போதையில் இருந்த கணேசன், முரளியையும் அவருடைய குடும்பத்தைப் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த சிறுவன், கணேசனை கீழே தள்ளி விட்டுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருடைய தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவனைசிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)