Skip to main content

அரசு வேலை வாங்கி தருவதாக 17 லட்சம் ரூபாய் சுருட்டல்... மாஜி முதல்வரின் உதவியாளர் மீது புகார்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

17 lakh rupees rolled out to buy government jobs; Complain about former Chief Minister's aide!

 

சேலம் அருகே, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த 10 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். 

 

கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமியுடன் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தியுள்ளார். 

 

இதற்கிடையே, கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளராக வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி, அவரிடம் 17 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். 

 

இந்தப் பணத்தை தமிழ்ச்செல்வன், அவருடைய நண்பர் செல்வக்குமார் என்பவர் மூலமாக கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி மணி அவருக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. 

 

அதனால் தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பித் தரும்படி தமிழ்ச்செல்வன் பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் போக்குக் காட்டி வந்துள்ளார் மணி. 

 

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தமிழ்ச்செல்வன், இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி மணி மீது புகார் அளித்திருந்தார். 

 

இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் நேரடி விசாரணை நடத்தியதில், தமிழ்ச்செல்வன் தரப்பிலிருந்து மணியின் வங்கிக் கணக்கில் 17 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 

 

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி மீது மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இதற்கிடையே மணி தலைமறைவாகிவிட்டார். அவரை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

 

மணியிடம் வேறு யாரேனும் அரசு வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் புகார் அளிக்கலாம் என்றும் மாவட்டக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.