Skip to main content

யானை மேல் மன்னர் உலா வரும் 15 ஆம் நூற்றாண்டு சிற்பம் கண்டெடுப்பு

Published on 05/02/2023 | Edited on 05/02/2023

 

A 15th-century sculpture of a king riding an elephant was discovered

 

சிவகங்கை  தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன் கள ஆய்வாளர் கா.சரவணன் மற்றும் ஆசிரியர் ஒ.முத்துக்குமார் ஆகியோர் பாண்டியன் கோட்டைப் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வுக்காக  செல்லும் வழியில் யானை மேல் மன்னர் உலா வரும் 15 ஆம் நூற்றாண்டு சிற்பத்தை கண்டறிந்துள்ளனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா கூறும் போது, காளையார்கோவிலில் வாள் மேல் நடந்த அம்மன் கோவில் முன் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கிழக்குப் பகுதியில் பழமையான கற்துண்களும் சிற்பங்களும் இரண்டு இடங்களில் குவியலாக கிடக்கின்றன.

 

யானை மேல் மன்னன் உலா வரும் காட்சி

 

குவியலாகக் கிடக்கும் கற்களை விட்டு அவற்றிலிருந்து தனித்து  தனியாகக் கிடக்கும் கல்லிலே மன்னன் ஒருவன் யானையின் எருத்தத்தில் அதாவது யானையின் கழுத்தில் 'யானை எருத்தத்து அணியிழையார் மேலிரீஇ' (சிலப்பதிகாரம்) அமர்ந்து செல்வதும் அம்மன்னவனுக்கு பின் பணியாளர் ஒருவர் அமர்ந்து வெண்கொற்றக்குடை பிடித்துச் செல்வதும் சாமரப் பெண்கள் வெண்சாமரம் வீசுவதுமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சிற்ப அமைதியைக் கொண்டு இது 15 ஆம் நூற்றாண்டாகக் கருத இடமுண்டு, மேலும் இப்பகுதி அதிட்டானம் மேல் அமைந்த வேதிகை யாகவோ அல்லது கபோதகம் கீழ் அமைந்த உத்திரப் பகுதியாகவோ இருக்கலாம்.

 

A 15th-century sculpture of a king riding an elephant was discovered

 

பொதுவாக மன்னரோ தெய்வமோ உலா வரும்பொழுது மாட மாளிகையில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் எழுவகை மகளிர் காதல் கொள்வதாக இலக்கியங்களில் வர்ணிக்கப்படும் இச் செய்தி இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

வட்ட வடிவிலான செம்பூரான் கற்கள் தூண் எச்சங்கள்

 

இப்பகுதியில் கருங்கற்கள் எனப்படும் வெள்ளைக் கற்கள் குறைவாகவும் செம்பூரான் கற்கள் அதிகமாகவும் கிடைக்கப்பெறுகின்றன. அவ்வகையில் செம்பூரான்  கற்களை வட்டமாக வெட்டி  ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, மேல் சுண்ணாம்பு பூசியும் பூசாமலும் தூண்களாக பயன்படுத்தி உள்ளனர். இவ்வகைத் தூண்கள் தேவகோட்டை - காரைக்குடி சாலையில் அமைந்துள்ள சங்கராபதி கோட்டையில் முழுமையாகக் காணக் கிடைக்கின்றன.

 

பல ஆண்டுகளாக குவியலாகக் கிடக்கும் கற்கள்

 

கோவில் கட்டுமானக் கற்கள், சிற்பங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதே இடத்தில் குவியலாகக் கிடப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

வாள்மேல் நடந்த அம்மன் கோவிலோடு பாண்டிய மன்னர்களின் கதை பொய்ப்பிள்ளைக்கு மெய்ப்பிள்ளை தந்த திருவிழாவாகக் கொண்டாடப் பெறுவதால் இக்கோவிலின் பழமையை உணரலாம். இக்கோவிலின்  சிதைவுற்ற பழைய கட்டுமானப் பகுதியாகவே இவை இருக்கலாம் என கருத முடிகிறது.

 

அரிய சிற்பம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க ஏற்பாடு

 

யானை மேல் மன்னர் அமர்ந்து செல்லும் அரிய வகை காட்சியிலான  15 ஆம் நூற்றாண்டு  சிற்பம் கிடைத்துள்ளதால் இதை அரசு அருங்காட்சியகத்தில் தேவஸ்தானம் சமாஸ்தானம் அனுமதியோடு ஒப்படைக்கும் பணியை சிவகங்கை தொல்நடைக் குழு செய்து வருகிறது என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்