/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2724.jpg)
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரைச் சேர்ந்தவர் அருணாசலம் (88). இவரது மனைவி ஜாய் சொர்ணதேவி(83). இருவரும் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில், இளைய மகளும், மகனும் திருமணமாகி வெளியூர்களில் வேலையிலிருக்கின்றனர். இவரது மூத்த மகள் ராணி, நெல்லை மாவட்டம், வள்ளியூர் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்துவருகிறார். இவர் தினமும் வேலையை முடித்துவிட்டு வள்ளியூரிலிருந்து இரவு 9 மணிக்குள்ளாக வீடு திரும்பிவிடுவார்.
நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற ராணியால் 9 மணிக்குள் வீடு திரும்பமுடியாமல் போயிருக்கிறது. அன்றைய இரவு 7 மணியளவில் அருணாசலம் வீட்டினுள்ளே டிவி பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே திண்ணைப் படியில் ஜாய்சொர்ண தேவி அமர்ந்திருந்தார். அப்போது நான்கு மர்ம நபர்கள் வீட்டுக்குள் வந்து ஜாய்சொர்ணதேவியிடம் விலாசம் கேட்பது போன்று பேசியுள்ளனர். அப்போது, திடீரென்று அவரைக் கம்பால் தாக்க மயங்கியிருக்கிறார் சொர்ணதேவி. பின்னர் அவரை இழுத்துச் சென்று படுக்கையறையில் போட்டிருக்கிறார்கள். சத்தம் பேட்டு வெளியே வந்த அருணாச்சலத்தையும் தாக்கியவர்கள், அவரின் கைகால்களைக் கட்டி அதே படுக்கையறையில் அடைத்தனர்.
அதன்பின் மேஜையிலிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதிலிருந்த 150 பவுனுக்கும் மேற்பட்ட நகைகள், 10 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பிய மகள் ராணி, பெற்றோரைத் தேடியுள்ளார். அப்போது படுக்கையறையில் தன் தாயும் தந்தையும் மயக்கத்தில் முனங்கும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி. காயங்களோடு மயங்கிக்கிடந்த தாயையும் தந்தையையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தவர், பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். தகவலறிந்த தென்காசி எஸ்.பி.கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்ப நாய் கொண்டு சோதனையிட்டனர். அப்போது மோப்ப நாய், கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 4 ரோடுகளை சுற்றிவிட்டு மீண்டும் வீட்டிற்கே வந்துள்ளது.
அண்மையில், தன், நிலத்தை விற்ற அருணாசலம் அதன் பணத்தையும் வீட்டில் வைத்திருந்தாகச் சொல்லப்படுகிறது. மேலும் வந்த கொள்ளையர்கள் பனிக்காலங்களில் அணியும் மங்கிகுல்லா அணிந்திருந்ததாகவும், சகஜமாகவே வந்தார்கள் என்பதும், பலநாட்கள் நோட்டமிட்டு தம்பதியருக்கு அறிமுகமானவர்களே ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தனியே இருந்த தம்பதியைத் தாக்கி நடத்தப்பட்ட மெகா கொள்ளைச் சம்பவம் பாவூர் சத்திர வட்டாரத்தை பீதியில் தள்ளியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)